டெல்லி | தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு.. இணை நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை!
உலக அளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான டெல்லி, தீபாவளிக்குப் பிறகு கடுமையான காற்று மாசுவை சந்தித்தது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் டெல்லியில் காற்றின் தரம் 376 ஆக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் ஓரளவுக்கு மேம்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 9 அன்று காற்றின் தரம் 376 ஆக இருந்த நிலையில் இன்று காற்றின் தரக் குறியீடு 77 புள்ளிகள் குறைந்து 299 ஆகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், மோசமான காற்றுத் தரப் பிரிவிலேயே டெல்லி நீடிக்கிறது. அதேநேரத்தில், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் லோனியில் காற்றின் தரக் குறியீடு 470 ஆக உயர்ந்து கடுமையான மாசு நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, டெல்லியில் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் காற்று மாசு ஏற்படுவதற்குக் பட்டாசுகளே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக இந்திய வெப்பமண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (IITM) தெரிவித்துள்ளது. ஐஐடிஎம்-ன் மூலப் பகிர்வு மதிப்பீடுகளின்படி, நவம்பர் 9 அன்று டெல்லியின் காற்று மாசுச் சுமையில் பட்டாசுகளின் பங்களிப்பு 71.1 சதவீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இதன் அளவு 29.8 சதவீமாகக் குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி பட்டாசுகளின் பங்களிப்பு மிக அதிகமாக இருந்ததாகவும், அடுத்த நாளான நவம்பர் 10ஆம் தேதி அது படிப்படியாகக் குறைந்துள்ளதாகவும் ஐஐடிஎம் மாதிரிகள் காட்டுகின்றன.
இதற்கிடையே, டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு (AQI) 300-ஐ தாண்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அரசாங்கமும் சுகாதார நிபுணர்களும் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் அதாவது ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் இதயக் கோளாறுகள் உள்ளவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம், தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படும் பயிர்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தலைநகர் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் சுவாசிக்க சிரமமான நிலையில் காற்றின் தரம் உள்ள நிலையில், பயிர் கழிவுகள் பஞ்சாப் மாநிலத்தில் எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நவம்பர் 9ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் 4,657 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 1,442 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் இழப்பீடாக 7 கோடியே 28 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நெல் அறுவடைப் பணிகள் 93.70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தொடர்வது காற்று மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக வட மாநில அரசுகளுக்கு மாறியுள்ளது.

