நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக கருதப்படும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வந்த எண்டோஸ்கோபி அறையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகை வருவதை அறிந்த ஊழியர்கள், நோயாளிகள் அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றினர். தொடர்ந்து தீ மளமளவென பரவிய நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து 6 தீயணையப்பு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரங்களுக்குப் பிறகு போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், மருத்துவ உபகரணங்கள் முழுவதும் எரிந்ததால், அதிலிருந்து புகை தொடர்ச்சியாக வெளியேறிக் கொண்டே இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் எய்ம்ஸ் நிர்வாகமும் தீ விபத்து குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்களும், தீயணைப்பு துறையினரும் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.