தெலங்கானா | மைதானத்தில் விளையாடிய மாணவருக்கு நேர்ந்த சோகம்!
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், தெலங்கானாவில், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தலைநகர் ஹைதராபாதில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பங்கெடுத்த மாணவர் ஒருவர், திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கோடை வெயில் தாக்கத்தினால் மாணவர் உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தெரியாத நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு காரணம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.