25வது திருமண விழாவைக் கொண்டாடிய ஜோடி.. மாரடைப்பால் உயிரிழந்த தொழிலதிபர்!
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் 50 வயதான தொழிலதிபர் ஒருவர் தனது 25வது திருமண விழா கொண்டாட்டத்தின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் வாசிம் சர்வத் (50). இவரது மனைவி ஃபரா. தொழிலதிபரான வாசிம், தன்னுடைய 25வது திருமண நாளைச் சிறப்பாகக் கொண்டாட எண்ணினார். இதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. அதன்படி, இந்த விழா பிலிபிட் பைபாஸ் சாலையில் உள்ள ஓர் இடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது தம்பதியினர் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனர். தவிர, உறவினர்களுடன் மேடையில் பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது வாசிம் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர், மாரடைப்பால் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.