தெலங்கானாவிலும் அமலாகிறது 10 மணி நேர வேலை!
தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது. வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5 அன்று தொழிலாளர், வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் தொழிற்சாலைகள் துறையால் வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின்படி, தெலங்கானா கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1988 (1988 ஆம் ஆண்டின் சட்டம் எண் 20)இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்தபட்சம் 6 மணி நேர வேலை நேரத்துக்கிடையில் 30 நிமிட இடைவெளி வழங்கப்பட வேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் மொத்த வேலை மற்றும் ஓய்வு ஒரு நாளில் 12 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊழியர்கள் வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும் மேலாக கூடுதல் நேர ஊதியத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படலாம். ஆனால் எந்த காலாண்டிலும் 144 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. இந்த நிபந்தனைகளை மீறுவது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விலக்கு ரத்து செய்யப்படும் என்று அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது. ஜூலை 8ஆம் தேதி தெலங்கானா அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு இந்த உத்தரவு அமலுக்கு வரும்.
முன்னதாக, ஆந்திராவில் 10 மணி நேர வேலை அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.