தினமும் 10 மணி நேர வேலை .... ஆந்திரா அரசுக்கு வலுக்கும் கண்டனம்!
நாட்டின் உற்பத்தியை பெருக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆந்திராவில் தற்போது ஆட்சி நடத்தும் தெலுங்கு தேசம் கட்சி ஒரு முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கு தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர்கள் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த செய்தி முதலாளிகள், தொழில் துறையினரிடம் அதிக வரவேற்பை பெற்றாலும், தொழிலாளர்களிடையே பெரும் அதிப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முயற்சியை அரசு கையில் எடுத்துள்ளது என்றும் பலர் விமர்சனங்களை முன்வைக்க துவங்கியுள்ளனர்.
தற்போது இருக்கும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உழைப்பு என்பது மிக எளிதாக கிடைத்த ஒன்றில்லை. மாபெரும் புரட்சிகளும், பல புரட்சியாளர்களின் தியாகமுமே இதனை பெற்றுதந்தன.
“8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு” என்னும் முழக்கத்தை முதலில் முன்வைத்தவர் ராபர்ட் அவன். இதனைத்தொடர்ந்து பல போராட்டங்கள் முன்வைக்கப்பட்டன. பல உயிர்தியாகங்கள்.
இதன்பிறகுதான், ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை அல்லது வாரத்திற்கு 48 மணி நேரம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது தொழிலாளர் அமைப்பு.
இந்தியாவை பொறுத்தவரை ஆரம்பத்தில் 12- 14 மணி நேரமே முதலில் நடைமுறையில் இருந்தது. அம்பேத்கர் 1942லேயே எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தினாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட The Industries Act மூலமாகவே இது சட்டமாக்கப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக சென்னை மெரீனா கடற்கரையில்தான் மே தினம் கொண்டாடப்பட்டது. ம. சிங்காரவேலரால் துவக்கப்பட்ட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி மே தினத்தை முதன் முதலில் கொண்டியது. இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 8 மணி நேர வேலை என்பது நனவானது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் வகையிலான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்களுக்கு பின்னர், அம்மசோதாவை அரசு திரும்பப் பெற்றது.
இப்படி பல போராட்டங்களை கடந்து வந்தபிறகும், 8 மணி நேரம் வேலை நேரம் என்பது தற்போது 10 மணி நேரமாக மாற்ற ஆந்திர அரசு ஒப்புதல் அளித்திருப்பது, தொழிலாளர்கள், தொழிலாளர்கள் சங்கங்களின் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.
இதுமட்டுமின்றி, பெண் தொழிலாளர்கள் இரவு 7 மணிமுதல் காலை 6 மணி வரை இரவுப்பணி பார்ப்பதற்கான அனுமதியையும் வழங்க ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது. அதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தொழிலாளர் சம்மதத்துடன் மட்டுமே அமல்படுத்தப்படலாம் என்பதையும் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், தொழிலாளர் சங்கள் கடும் எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். ஆந்திராவின் முடிவை எதிர்த்து ஜூலை 9-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.