பீகார் | கருத்துக்கணிப்புகளை நிராகரித்த தேஜஸ்வி.. அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
பீகார் தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஆர்ஜேடி தலைவரும் மகாகட்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் நிராகரித்துள்ளார்.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில் நவம்பர் 6ஆம் தேதியும், எஞ்சியுள்ள 20 மாவட்டங்களில் 122 தொகுதிகளில், 2ஆம் கட்டமாக நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதன் வாக்குகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்படும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று இரவு வெளியாகின. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியே (பாஜ - ஜேடியூ) அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என பெரும்பாலான முடிவுகள் தெரிவித்தன.
மகாகத்பந்தன் கூட்டணிக்கு (காங் - ஆர்.ஜே.டி.) 70-90 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்க்கு 2 இடங்கள் கிடைக்கும் எனவும், பிறகட்சிகள் 5 இடங்களைக் கைப்பற்றும் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக ஆர்ஜேடி தலைவரும் மகாகட்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, “நேற்று, மாலை ஆறு அல்லது ஏழு மணி வரைகூட மக்கள் வாக்குப்பதிவின்போது நீண்ட வரிசையில் நின்றனர். மக்கள் பொறுமையாக வாக்களிக்க காத்திருந்தனர். வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவரத் தொடங்கின. நாம் தவறான நம்பிக்கையிலோ அல்லது தவறான புரிதலிலோ வாழவில்லை. இந்த ஆய்வுகள், ஓர் உளவியல் தாக்கத்தை உருவாக்கவும், தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுக்கவும் மட்டுமே வெளியிடப்படுகின்றன.
இந்தக் கணக்கெடுப்புகளைக் காட்டுபவர்களில் யாரிடமாவது மாதிரி அளவு பற்றி நீங்கள் கேட்டால், அவர்களில் யாரும் உங்களுக்குச் சொல்ல முடியாது. மாதிரி அளவு அல்லது கணக்கெடுப்பின் அளவுகோல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. தேர்தல் முடிந்ததும், நாங்கள் மக்களிடமிருந்து கருத்துக்களைச் சேகரித்தோம், எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மிகவும் நேர்மறையானவை. கடந்த காலங்களில், இதுபோன்ற நேர்மறையான கருத்துக்கள் ஒருபோதும் வந்ததில்லை. இந்த முறை எங்களுக்குக் கிடைத்த கருத்து 1995 தேர்தல்களின்போது கிடைத்ததைவிட இன்னும் சிறந்தது. இந்த அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர், இந்த முறை மாற்றம் நிச்சயமாக நிகழும்” எனத் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போதும் 100 சதவீதம் அப்படியே தேர்தல் முடிவுகளில் பிரதிபலிப்பதில்லை. கடந்தகாலங்களில் பல கணிப்புகள் தவறாக இருந்ததை நிரூபித்துள்ளன. சில நேரங்களில் சரியாகவும் இருந்துள்ளன. அதனால் தேர்தல் முடிவுகள் என்ன என்பது வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் தெரிந்துவிடும்.

