சரஸ்வதி தேவி தொடர்பான கருத்து; ராஜஸ்தானில் ஆசிரியை பணியிடைநீக்கம்

ராஜஸ்தான் மாநிலத்தில் மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
madan dilawar
madan dilawarpt web

ராஜஸ்தான் மாநிலம் பாரான் மாவட்டத்தில் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக ஹேம்லதா பைர்வா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இவருக்கும் உள்ளூர் மக்களுக்கும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படம் தொடர்பாக வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் கடவுள் சரஸ்வதியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது ஆசிரியை ஹேம்லதா பைர்வா இருதலைவர்கள் உடன் சரஸ்வதியின் புகைப்படம் வைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், ‘கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை’ என்று ஆசிரியை தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் அன்று ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர், பாரான் மாவட்டத்தில் உள்ள கிஷான்கஞ்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “சிலர் தனக்குத்தானே வெயிட்டேஜ் கொடுத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வேலைப் பாணி இன்னும் மாறவில்லை. மேலும் அவர்கள் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன என கேட்கிறார்கள். சொல்லிருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர்
ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர்

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், பாரான் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, அந்த ஆசிரியைக்கு பணியிடை நீக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்தே இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட கல்வி அதிகாரி இதுகுறித்து கூறுகையில், “கிராம மக்களுடன் உடன்பட்டு சரஸ்வதி தேவியின் உருவப்படத்தை மேடையில் வைத்து குடியரசு தினத்தை எவ்வித தடங்கலும் இல்லாமல் நடத்துவதை அந்த ஆசிரியை உறுதி செய்திருக்கலாம். மாறாக அவர் மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com