6 மாதங்களில் 30,000 ஊழியர்கள்.. 2026லும் தொடரும் பணிநீக்கம்.. எச்சரிக்கை விடுத்த TCS!
நடப்பாண்டிலும் பணிநீக்கம் தொடரும் என TCS நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அது, கடந்த 6 மாதங்களில், சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அவ்வப்போது தன்னுடைய நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த 6 மாதங்களில், சுமார் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. AIஇன் வளர்ந்து வரும் பயன்பாட்டால் கட்டாயப்படுத்தப்பட்ட இந்த மறுசீரமைப்பு, நிறுவனத்திற்குள் பணிநீக்கத்திற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் பணிநீக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டிலும் பணிநீக்கம் தொடரும் என TCS நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதற்கான எண்ணிக்கையை அது குறிப்பிடவில்லை. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், டிசிஎஸ் தனது பணியாளர்களை 11,151 பேர் வரை நீக்கியிருந்தது. இதன் விளைவாக, டிசம்பர் மாத இறுதியில் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 5,82,163 ஆகக் குறைந்தது. இது முந்தைய காலாண்டில் 5,93,314 ஆக இருந்தது. இதனால் அதன் பணியாளர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கும் குறைவாக உள்ளனர்.
செப்டம்பர் காலாண்டில் 19,755 ஊழியர்கள் குறைப்பைக் கருத்தில் கொண்டால், மொத்தத்தில், கடந்த ஆறு மாதங்களில், நிறுவனம் சுமார் 30,000 ஊழியர்களை நீக்கியுள்ளது. இன்றைய பல தொழில்நுட்ப நிறுவனங்களைப் போலவே, TCS நிறுவனமும், Claude மற்றும் Cursor போன்ற AI கருவிகளால் ஏற்படும் சவால்களையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொள்கிறது என்றாலும், பெரும்பாலான பணிநீக்கங்கள் உண்மையில் AI காரணமாக இல்லை என்பதை Oxford Economics அறிக்கை தெரிவித்துள்ளது. ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பணிநீக்கம் குறித்த செய்திகளைக் கட்டுப்படுத்த, நிறுவனங்கள் வேலை இழப்புகளுக்கு AI தாக்கத்தை ஒரு காரணமாகக் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது.

