சாலை விபத்தில் தமிழ்நாடு பிடித்த இடம் என்ன தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையின் முக்கிய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சாலை விபத்து
சாலை விபத்து முகநூல்

இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துக்கள் தொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ”நாடு முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 4,61,312 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2021-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 11.9 சதவீதம் அதிகமாகும்.

சாலை விபத்து
சாலை விபத்து முகநூல்

கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் 9.4 சதவீதத்திலிருந்து 15.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சாலை விபத்து அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 64,105 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 54,432 விபத்துகளும், கேரளாவில் 43,910 விபத்துகளும், உத்தரப்பிரதேசத்தில் 41,746 விபத்துகளும், கர்நாடகாவில் 39,862 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன.

இவைதான் முதல் 5 இடங்களில் உள்ளன. இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே 6 முதல் 10 இடங்களில் உள்ளன.

2022ம் ஆண்டு சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் நடைபெறும் மாநில வரிசையில், 22,595 உயிரிழப்புகளுடன் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 17,884 உயிரிழப்புகளும், மகாராஷ்டிராவில் 15,224 உயிரிழப்புகளும், மத்திய பிரதேசத்தில் 13,427 உயிரிழப்புகளும், கர்நாடகாவில் 11,702 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து முறையே 6 மற்றும் 10வது இடங்களில் ராஜஸ்தான், பீகார், ஆந்திரா, குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

சாலை விபத்து
சாலையில் சேதமா? ஃபோட்டோவோட இந்த செயலியில் பதிவேற்றுங்க... உடனே ஆக்‌ஷன் எடுக்கப்படும்!

2018 ஆண்டில் நாடு முழுவதும் 4,70,000 விபத்துகள் ஏற்பட்ட நிலையில், 1,57,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 4,56,000 விபத்துகளில் 1,58,000 பேர் உயிரிழந்துள்ளனர். 2020ல் 3,72,000 விபத்துகளில் 1,38,000 உயிரிழப்புகளும், 2021-ல் 4,12,000 விபத்துகளில் 1,53,000 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இது 2022ல் அதிகரித்து 4,61,000 விபத்துகளில் 1,68,000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில் பாதசாரிகள் 10,000 பேரும் மிதிவண்டிகளில் சென்றவர்களில் 1,445 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களில் 25,000 பேரும், ஆட்டோக்களில் 2,324 பேரும் உயிரிழந்துள்ளனர். இலகுரக வாகன விபத்துகளில் 10,174 பேரும், லாரிகளில் ஏற்பட்ட விபத்தில் 5,572 பேரும் பேருந்துகளில் நிகழ்ந்த விபத்துகளில் 1,798 பேரும் உயிரிழந்துள்ளனர்” என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் “2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக நடைபெறும் விபத்துகளின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்து இருக்கிறது. புதிய போக்குவரத்து சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சாலைகளின் தரங்களை அரசு உயர்த்த வேண்டும், சாலை விதிகளை மக்கள் மதிக்க வேண்டும். இரண்டும் ஒன்றுபட செயல்பட்டாலே விபத்துகளை வரும் காலங்களில் குறைக்க முடியும்” என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com