பலமுனைப் போட்டியில் BMC தேர்தல் | இடங்களை உறுதிசெய்த பாஜக - சிவசேனா.. தனித்துப் போட்டியிடும் NCP!
மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிட உள்ளன. ஆனால், இந்தத் தேர்தலில், மகாயுதி கூட்டணியில் இருந்து அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் உள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. முன்னதாக, மகாராஷ்டிராவில் 288 நகராட்சி மன்றங்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றியைப் பதிவு செய்து, 207 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக பாஜக 117 இடங்களையும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களையும் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, 2026 ஜனவரி 15 அன்று நடைபெறவுள்ள மாநகராட்சித் தேர்தலில் முக்கியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
மும்பை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வார்டுகள் பங்கீட்டை ஆளும் கூட்டணியில் உள்ள பாஜகவும் சிவசேனாவும் இறுதி செய்துள்ளன. அதன்படி, மும்பை மாநகராட்சித் தேர்தலில் பாஜக 137 இடங்களிலும், சிவசேனா 90 இடங்களிலும் போட்டியிட உள்ளன. அதேநேரத்தில், மகாயுதி கூட்டணியில்அங்கம் வகிக்கும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளது. பி.எம்.சி தேர்தலுக்கான 64 வேட்பாளர்களை என்.சி.பி இதுவரை அறிவித்துள்ளது. மேலும், இக்கட்சி சில இடங்களில் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் தனித்துப் போடியிடப் போவதாக அறிவித்துவிட்டது. சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவும் ராஜ் தாக்கரே வின்நவநிர்மாண் சேனாவும் இணைந்து போட்டியிடவுள்ளன.

