“முக்கியமா நாங்க 2 விஷயம் செய்ய போறோம்” - தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து சுப்ரியா சுலே கருத்து

அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அஜித் பவார், சரத் பவார், சுப்ரியா சுலே
அஜித் பவார், சரத் பவார், சுப்ரியா சுலேpt web

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அஜித் பவார், தன் ஆதரவாளர்களுடன் திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தார். பின்னர், அங்கு துணை முதல்வராக பதவியேற்றார். மேலும், தன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தார். இது, மகாராஷ்ட்ரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியது.

அஜித் பவார், சரத் பவார்
அஜித் பவார், சரத் பவார்ani

ஆனால், சரத் பவாரோ இண்டியா கூட்டணியில் உள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியில் சரத்பவார் அணியினரும், அஜித் பவார் அணியினரும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அறிவித்துள்ளது. கட்சியின் சின்னமான சுவர் கடிகாரத்தையும் அஜித் பவார் தலைமையிலான அணிக்கு ஒதுக்கியுள்ளது.

யாருக்கு எத்தைனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு?

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மகாராஷ்ட்ரா, லட்சத்தீவு, கேரளா, ஜார்கண்ட், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் மொத்தமாக 81 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 57 பேர் அஜித்பவாரை ஆதரித்துள்ளனர். சரத்பவாருக்கு 28 ஆதரவு எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இத்தகைய முடிவினை எடுத்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, 10க்கும் மேற்பட்ட முறை இருபிரிவுகளின் சட்டக்குழுக்களின் கூட்டத்தை நடத்தியபின் தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

பிரபுல் பட்டேல், அஜித் பவார்
பிரபுல் பட்டேல், அஜித் பவார்ani

சரத்பவார் அணிக்கு வழங்கப்பட்ட சலுகை

இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள அஜித் பவார், “எங்களது தரப்பு வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்டப்பின், தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, தனது பிரிவுக்கு புதிய பெயர் வைக்க தேர்தல் ஆணையம் சரத்பவாருக்கு சலுகை வழங்கியுள்ளது. புதன்கிழமை மாலை 4 மணிக்குள் 3 பெயர்களை வழங்க அவகாசம் வழங்கியுள்ளது.

”முக்கியமான இரு விஷயங்களை மேற்கொள்ள போகிறோம்” சுப்ரியா சுலே

தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து எம்.பி. சுப்ரியா சுலே கூறுகையில், “சரத்பவார் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவார். தொண்டர்கள் இன்னும் அவருடன் தான் இருக்கின்றனர். எங்கள் ஆவணங்கள் சரியாக இருந்தன. இக்கட்சியின் நிறுவன உறுப்பினர், நிறுவனத் தலைவர் எல்லாம் சரத்பவார் மட்டும் தான். ஆனால் இப்போது தற்போது மாறுபட்ட சூழல் நிலவுகிறது. இதையெல்லாம் செய்யும் கண்ணுக்குத் தெரியாத சக்தி நாட்டில் உள்ளது.

நாங்கள் இரு விஷயங்களை மேற்கொள்ளப்போகிறோம். அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாங்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம். இரண்டாவதாக புதன் கிழமை மாலைக்குள் மூன்று கட்சிப் பெயர்கள், மூன்று சின்னங்களை பரிந்துரைக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பை கொடுத்துள்ளது. அதையும் நாங்கள் செய்ய உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com