”வென்றால் சரி.. தோற்றால் EVM காரணமா?”- வாக்குச்சீட்டைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம்!
தேர்தலில் எதிரொலிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படுவதுடன், துல்லியமாகவும் விரைவாகவும் வாக்குகளை எண்ணி முடிக்க முடிகிறது. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதெல்லாம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய செய்திகள் பூதாகரமாகி விடுகின்றன.
முன்னதாக, உலகப் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நாம் புறக்கணிக்க வேண்டும். மனிதர்களால் அல்லது AI மூலம் இவை ஹேக் செய்யக்கூடும். இது சிறியதாகத் தெரிந்தாலும், இதன் விளைவு அதிகமானவை'' என்று ட்வீட் செய்திருந்தார். இது, இந்திய அரசியலில் மேலும் விஸ்வரூபமெடுத்தது.
இதற்கு அப்போது பதிலளித்திருந்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ”இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு `கருப்புப் பெட்டி.' அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை. நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. அரசு நிறுவனங்கள் பொறுப்புக்கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்குள்ளாகிறது'' என்று பதிலளித்திருந்தார்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்கூட தொடரப்பட்டன. விசாரணையின்போது, ”இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளியில் இருந்து அதை ஹேக் செய்வது என்பது சாத்தியமற்றது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவியும் (விவிபாட்) பயன்படுத்தப்படுகிறது” என இந்திய தேர்தல் ஆணையம் உறுதியளித்திருந்தது.
இதையடுத்து, ”அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், இந்த விவகாரம் மீண்டும் ஓய்ந்தபாடில்லை.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால், சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குளறுபடிகளை எழுப்பியுள்ளன. தவிர, மீண்டும் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
இந்த நிலையில், தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (EVM) பதிலாக வாக்குச்சீட்டைப் பயன்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (நவ.26) தள்ளுபடி செய்தது.
”தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வாக்குச்சீட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது அவசியம்” எனக் கோரி கே.ஏ.பால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் பெஞ்ச், “சந்திரபாபு நாயுடுவோ, ஜெகன் மோகன் ரெட்டியோ தோற்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகச் சொல்கிறார்கள். வெற்றிபெற்றால், அவர்கள் எதுவும் பேசுவதில்லை. இதை எப்படிப் பார்க்க முடியும்” எனக் கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது.