“பாஸ்போர்ட்டை ஒப்படையுங்கள்” - பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டிஜிபி பொன் மாணிக்கவேல் பேட்டி தர தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் விவகாரத்தில் பொன்மாணிக்கவேலின் முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி சிபிஐ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன் மாணிக்கவேல் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது விசாரணையை பாதிக்கக் கூடிய விஷயமாக இருப்பதால் அவர் பேட்டியளிக்க தடை விதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.
ஏற்கெனவே முன்ஜாமின் வழங்கியபோது அவர் பாஸ்போர்ட் ஒப்படைக்கப்படுவதற்கான நிபந்தனை இல்லாததால் அவர் ஒப்படைக்க மறுத்து வருவதால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
பொன்மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யவேண்டும் என காதர்பாட்சா தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சிலை கடத்தல் விவகாரம், சி.பி.ஐ விசாரணை தொடர்பாக பேட்டி அளிக்க கூடாது என உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக 4 வாரத்திற்குள் பொன் மாணிக்கவேல் பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.