“370 சட்டப்பிரிவு தற்காலிகமானது என்று சொல்லவே முடியாது”-உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தராசு ஷ்யாம்!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கம் செய்திருந்தது. சட்டப்பிரிவு 370ஐ பொருத்தவரை, ஜம்மு காஷ்மீரை முன்வைத்து பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர்த்த இதர விவகாரங்களில் மத்திய அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்தியாவின் பிற மாநிலத்தில் மாநில அரசைக் கலைக்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 356 ஆவது பிரிவு அது செல்லுபடியாகாது. குடியரசுத் தலைவருக்கு இருக்கும் இந்த தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கலைக்க முடியாது என்றும் 370 ஆவது பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.

"370-ஐ ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
"370-ஐ ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் இரட்டை குடியுரிமை பெற தகுதியானவர்கள். அதாவது மாநிலக் குடியுரிமை மற்றும் இந்தியக் குடியுரிமை. ஜம்மு காஷ்மீருக்கு தனியாக அரசியல் சாசனம் உருவாக்கப்படலாம் என்பதும் ஒரு வாய்ப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கென தனிப்பட்ட கொடியையும் உருவாக்கப்படலாம் என்பது அம்மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதி. ஜம்மு காஷ்மீருக்கென தனி சட்டமன்றத்தையும் வைத்துக்கொள்ள முடியும். மாநில சட்டமன்றத்திற்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

370 மற்றும் 35ஏ பிரிவின் கீழ் இந்தியாவின் பிற மாநிலங்களில் மக்களை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இந்த மாநிலத்திற்கு பொருந்தாது. பிற மாநில மக்கள் இங்கு சொத்துக்களை வாங்கமுடியாது. இந்தியா முழுவதும் பொருளாதார அவசரநிலையை அமல்படுத்த அரசியல் சாசனத்தின் 360 ஆவது பிரிவு பயன்படுத்தப்படும். ஆனால் இச்சட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இந்தியா முழுவதையும் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் அதிகாரம் ஜம்மு காஷ்மீருக்கு வரும்போது வரையறுக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அவசர நிலையைக் கொண்டு வர வேண்டும் என்றால் அம்மாநில அரசு தான் பரிந்துரை செய்யவேண்டும். இந்திய அரசோ அல்லது ஜனாதிபதியோ தன்னிச்சையாக கொண்டு வர முடியாது போன்ற சிறப்பு அந்தஸ்துகளை ஜம்மு காஷ்மீருக்கு 370 சட்டப்பிரிவு கொடுக்கிறது.

 ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை

SupremeCourt |JammuAndKashmir | Atricle370h
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து - ஆக.2 முதல் விசாரணை SupremeCourt |JammuAndKashmir | Atricle370h

சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் 3 விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் மாதம் தொடங்கி 16 நாட்கள் நடைபெற்ற நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிப்தி சந்திரசூட், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றொரு தீர்ப்பை அளித்துள்ளார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்த இரண்டு தீர்ப்புகளிலும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவை நீக்கியது செல்லும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மத்திய அரசு எடுத்துள்ள முடிவை உறுதி செய்துள்ளார். மாநிலத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக செய்யப்பட்ட தற்காலிக ஏற்பாடுதான் சட்டப்பிரிவு 370 என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டது தான் ஜம்மு காஷ்மீர் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடியும். ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை என்பதும் தற்காலிக ஒரு சபை தான். சிறப்பு அந்தஸ்து 370ஆவது பிரிவை ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்த அதற்காக ஆலோசனை கேட்டு பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள்ளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்ற உத்தரவை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவாக பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ள கருத்துக்களை இந்தக் காணொளியில் காணலாம்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் செப்டம்பர் 2024-க்குள் ஜம்மு, காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் ஜம்மு, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை விரைவில் வழங்க வேண்டும் லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com