பீகார் மறுசீராய்வு வழக்கு.. நெருங்கும் தேர்தல்.. உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்து!
பீகார் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த வழக்கில், ”ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய இறுதிப் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களிடமும் இருக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பீகாரில், அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னதாக இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகார் SIR மறுசீராய்வு செப்டம்பர் 30 அன்று நிறைவடைந்தது. ஜூன் 24 நிலவரப்படி 7.89 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், மறுசீராய்வுக்குப் பிறகு 7.42 கோடி வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் தக்கவைக்கப்பட்டு உள்ளனர். நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் 65 லட்சமாக இருந்தது, பின்னர் அது 47 லட்சமாகக் குறைந்தது. இதையடுத்து, மக்களின் வாக்களிக்கும் உரிமைகள் பாதிக்கப்படுவதாக வாக்களர் திருத்தப் பணிகள் மீது எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையாகவும், துல்லியமாகவும் வாக்காளர் திருத்தப் பணிகள் நடைப்பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தது.
எனினும், இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் மறுசீராய்வுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் தரவு மற்றும் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களை வெளியிட வேண்டிய பொறுப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் நன்கு அறிந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ச்சி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், நீக்கப்பட்ட மற்றும் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் தனித்தனியாக வெளியிட வேண்டும் என்று கோரினார். இதற்குப் பதிலளித்த நீதிபதி சூர்யா காந்த், "அவர்கள் (தேர்தல் ஆணையம்) தங்கள் பொறுப்பை அறிவார்கள். சேர்க்கைகள் மற்றும் நீக்கங்களைச் செய்த பிறகு, அவர்கள் அதைப் பிரசுரம் செய்யக் கடமைப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை" என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ’’நீதிமன்றத்தின் உத்தரவு தேவையில்லை என்றும், தரவுகள் நிச்சயம் வெளியிடப்படும்’’ என்றும் உறுதியளித்தார். ஒவ்வொரு தொகுதிக்கும் உரிய இறுதிப் பட்டியல் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களிடமும் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.