நீட் முதுநிலை தேர்வு | ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறப்படும் மதிப்பெண்ணை வைத்தே சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்த நிலையில், நீட் முதுநிலைத் தேர்வு அடுத்த மாதம் ஜூன் 15ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட இருக்கிறது. தேர்வை இரண்டு முறையாக (two shifts) அதாவது காலை மற்றும் மாலை என இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்டால், சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதை எதிர்த்து, அதாவது ஒரேநேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'தேர்வை இரண்டு ஷிப்டுகளாக நடத்துவது அதிகாரத்துடன் கூடிய தன்னிச்சையான அணுகுமுறை ஆகும். இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூற முடியாது. அதாவது இரண்டுமே சிரமமாகவோ அல்லது இரண்டுமே எளிதாக இருக்க முடியாது. அதனால் தேர்வை இரண்டு ஷிப்டுகளாக நடத்துவது சரியல்ல' என்று கூறிய நீதிபதிகள், நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்தி முடிக்க தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், தேர்வை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.