ஒரே ஷிஃப்ட் முறையில் நடக்க இருக்கும் நீட் தேர்வு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
செய்தியாளர் ராஜீவ்
2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஒ.எம்.ஆர் முறையில் ஒரே நாளில் ஒரே ஷிஃப்ட் முறையில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2025ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவக் கல்வி நுழைவு தேர்வுவான (NEET-UG) நீட் தேர்வு குறித்த அறிவிப்பு 2024 டிசம்பர் மாதம் வெளியாக இருக்க வேண்டிய நிலையில் இப்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கான காரணமாக தேர்வு முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருவதாகவும், குறிப்பாக முறைகேடுகளை தடுக்க ஆதார் எண் அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பம் பெறுதல் , கணினி அடிப்படையில் தேர்வை நடத்துதல், பாடத்திட்டத்தில் மாற்றம் என பல காரணங்கள் கூறப்பட்டது.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் 2025ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு ஓ.எம்.ஆர் அடிப்படை எனப்படும் பேனா & பேப்பர் முறையில் நடைபெறும் என்பது உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒரே நாளில் ஒரே ஷிஃப்ட்-ல் நீட் இளநிலை தேர்வு நடத்தப்படும் என்றும், 2025ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neetug2025@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையை தொடர்பு கொள்ளலாம் எனவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.