"கோட்டா நகரில் மட்டும் மாணவர்கள் இறப்பது ஏன்?" - சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!
நீட் தேர்வு எழுதிய மாணவி தனது பெற்றோருடன் கோட்டாவில், வசித்து வந்தநிலையில், அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரக்பூரில் உள்ள ஐஐடியில் படிக்கும் 22 வயது மாணவர் ஒருவர், மே 4 ஆம் தேதி அன்று, தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இப்படி சமீப காலமாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (24.5.2025) விசாரித்து வந்தது.
நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு இவ்வழக்கை விசாரித்தனர். அப்போது, ராஜஸ்தானின் கோடா நகரில் இந்தாண்டு மட்டும் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
இதனைக்கேட்ட நீதிபதிகள் அமர்வு, கோட்டா நகரில் மட்டும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வது ஏன்? என்று சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து தெரிவித்த நீதிபதிகள், “ கோட்டா நகரில் மட்டும் மாணவர்கள் தற்கொலை செய்து இறப்பது ஏன்? ஒரு மாநில அரசாக நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது இல்லை? எப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஏன் நான்கு நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்? மாணவர்களின் தற்கொலைக்கு என்னதான் காரணம்?" என்று கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் , கோட்டா நகரில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும், கோட்டா நகர காவல்துறை அதிகாரி வருகிற ஜூலை 14 ஆம் தேதி தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.