இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்! ராஜஸ்தானில் நிகழ்ந்த சோக சம்பவம்!
ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைனா தேவி (23). ஐந்து மாத கர்ப்பிணியான இவருக்கு, காசநோய் மற்றும் ரத்த சோகை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவரது ரத்த வகை 'ஏ பாசிட்டிவ்' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டாக்டரின் பரிந்துரைப்படி, ரத்த வங்கியில் இருந்து 'ஏ பாசிட்டிவ்' வகை ரத்தம் பெறப்பட்டு, சைனாவுக்கு ஏற்றப்பட்டது. பின்னர் திடீரென்று சைனாவுக்கு கடுமையான காய்ச்சல், குளிர், ரத்தக்கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, மீண்டும் ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவரது ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்று வந்தது. இதையடுத்து டாக்டர்கள் நடத்திய மறு பரிசோதனையில், சைனாவின் ரத்தவகை 'பி பாசிட்டிவ்' என்பதும், ரத்தவகை மாற்றி ஏற்றப்பட்டதால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நேரத்தில், கருவில் இருந்த குழந்தை அவரது கருப்பையிலேயே இறந்தது. இறந்த கருவை அகற்ற மருத்துவர்கள் மருந்துகளை வழங்கினர், ஆனால் அந்தப் பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது ஹீமோகுளோபின் அளவு மேலும் குறைந்தது. இதனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். சைனா தேவியின் குடும்பத்தினர் இது மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமான செயல் எனக் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.