”திருமணத்தை மீறிய உறவால் ஜீவனாம்சம் கிடையாது” - விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் விவாகரத்து வழக்கில், குடும்ப நீதிமன்றம் தனது மனைவிக்கு மாதத்திற்கு ரூ.4,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார்.
மனுவில், தனது மனைவி இன்னொரு ஆண் நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, அதற்கான ஆதாரத்தையும் வழங்கியிருந்தார். மேலும் அவர், ’திருமணத்தை மீறிய உறவில் அவர் இருக்கும்போது ஜீவனாம்சம் கோர முடியாது என்றும், இத்தீர்ப்பை அறிவிக்கும்போது தனது நிதி நிலைமையை குடும்ப நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார் வர்மா, குடும்ப நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். மேலும், ”இவ்வழக்கில் எதிர்தரப்பு நபர் (மனைவி) தொடர்ந்து ஒரு சட்டவிரோத உறவில் வாழ்வதற்கும், அதற்காக ஜீவனாம்சம் கோரும் உரிமையை மீண்டும் பெறுவதற்கும் உரிமம் வழங்க முடியாது” என உத்தரவிட்டார்.