”உலகின் சிறந்த ஸ்பின்னர் எங்களிடம் உள்ளார்..” - பாகிஸ்தான் பயிற்சியாளர்
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசியக்கோப்பை மோதலை ஸ்பின்னர்கள் தீர்மானிப்பார்கள் என்றால், எங்களிடம் தான் தற்போதைய உலகின் சிறந்த ஸ்பின்னர் இருப்பதாக மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார்.
2025 ஆசியக்கோப்பையின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் இருந்துவருகிறது.
இரண்டு அணிகளும் வரும் 14-ம் தேதி மோதவிருக்கும் நிலையில், தற்போதே இரண்டு அணிகளுக்கும் இடையேயான கருத்து மோதல் தொடங்கிவிட்டது.
இந்தியா உடனான மோதல் ஸ்பின்னர்கள் மூலம் தீர்மானிக்கப்படும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படியானால் தற்போதைய உலகின் சிறந்த ஸ்பின்னர் முகமது நவாஸ் பாகிஸ்தான் அணியில் தான் இருக்கிறார். எங்களிடம் மேலும் அப்ரார் அகமது, சுஃபியான் போன்ற சிறந்த ஸ்பின்னர்களும் எங்களிடம் உள்ளனர் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
உலகின் சிறந்த ஸ்பின்னர் முகமது நவாஸ்..
இந்தியாவிற்கு எதிரான மோதலுக்கு முன்னதாக, பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன், உலக கிரிக்கெட்டில் தற்போதைய சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் என்றூ முத்திரை குத்தினார்.
மைக் ஹெஸ்ஸனின் தலைமையில் சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் சிறந்த ஃபார்மில் இருந்துவருகிறார். கடைசியாக விளையாடிய 11 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், சமீபத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடர் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்தியா உடனான மோதலுக்கு முன்னதாக இன்று ஓமன் அணிக்கு எதிராக பாகிஸ்தான் முதல் போட்டியில் விளையாடுகிறது. செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனிடம், இந்தியா உடனான மோதலின் முடிவு சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சால் தீர்மானிக்கப்படுமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் அணியில் இருக்கும் சிறந்த விசயம் என்னவென்றால், எங்களிடம் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் எங்களிடம் உள்ளார், மேலும் அவர் அணிக்கு திரும்பி வந்ததிலிருந்து கடந்த ஆறு மாதங்களாக தரமான பந்துவீச்சை வெளிப்படுத்திவருகிறார். அவருடன் பக்கபலமாக அப்ரார் அகமது, சுஃபியான் இருவரும் இருக்கின்றனர். சூழ்நிலைகள் ஸ்பின்னுக்கு ஏற்றதாக இருக்கும் என்றால், எங்களிடம் நிறைய சுழற்பந்து வீச்சு விருப்பங்கள் உள்ளன.
இந்திய அணி அதிகமான நம்பிக்கையுடன் உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும், அதற்கேற்றவாரே அவர்கள் விளையாடியு வருகின்றனர். ஆனால் எங்களுக்கு முன் இருக்கும் சவால் குறித்து நாங்கள் அறிவோம், ஒரு அணியாக நாளுக்கு நாள் முன்னேறுவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரின் கையில் இருக்கும் பணியை சரியாக செய்துவிட்டாலே போதும். நாங்கள் இந்தியா உடனான மோதலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.