”சுதர்சன்-ஜெய்ஸ்வால் தான் தொடங்க வேண்டும்.. கேப்டனாக கில் தேர்வு சரியானது” - ரிக்கி பாண்டிங்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா, விராட் கோலி என்ற 3 மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகள் ஓய்வை அறிவித்திருப்பது இந்தியாவிற்கு சவாலான நேரத்தை விட்டுச்சென்றுள்ளது.
3 ஜாம்பவான்கள் இல்லாத மிகப்பெரிய வெற்றிடத்தை இந்தியா எப்படி நிரப்பப்போகிறது என்ற கேள்விகளுக்கு பதிலாக, சுப்மன் கில் தலைமையிலான டெஸ்ட் அணியை கட்டமைத்துள்ளது இந்திய தேர்வுக்குழு.
ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இருக்கும்போது சுப்மன் கில்லுக்கு கேப்டன்சி வழங்கியது பேசுபொருளாக மாறிய நிலையில், கில்லை கேப்டனாக தேர்வுசெய்த முடிவு சரியானது தான் என்று பேசியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங்.
சுப்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்..
சுப்மன் கில் தலைமையிலான இந்தியாவின் புதிய டெஸ்ட் கிரிக்கெட் பயணம் குறித்து ஐசிசி ரிவ்யூவில் பேசியிருக்கும் ரிக்கி பாண்டிங், சுப்மன் கில்லின் கேப்டன்சி தேர்வு சரியானது தான் என்று பேசியுள்ளார்.
சுப்மன் கில் கேப்டன்சி தேர்வு சரி - பும்ரா, கேஎல் ராகுல் போன்ற மூத்த வீரர்கள் இருக்கும்போது சுப்மன் கில்லுக்கு கேப்டன்சி வழங்கியது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். பும்ராவின் உடல்நிலை சமீபகாலமாக பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது, நீங்கள் கேப்டனாக இருந்துகொண்டு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினால் அணியின் எதிர்காலம் கெட்டுப்போகும்.
ஒரு கேப்டன் கேப்டன்சி பொறுப்பை ஏற்றபிறகும் ரன்களை அடிக்கவேண்டும், அந்தவகையில் சுப்மன் கில் ஐபிஎல்லில் சிறப்பாக கேப்டன்சி செய்ததோடு ரன்களையும் குவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கேப்டனாகவும் அவர் ரன்களை குவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கில் 4வது இடத்தில் களமிறங்க வேண்டும் - மற்ற நாடுகளை காட்டிலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற 2 ஆளுமை வீரர்கள் இல்லாததை இந்தியா எளிதில் கட்டமைத்துவிடும் என்று நம்புகிறேன். அவர்களிடம் அந்தளவு திறமையான வீரர்கள் இருக்கின்றனர், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் உள்ளே வந்து சிறப்பாக செயல்பட்டதை நாம் முன்பே பார்த்து இருக்கிறோம்.
என்னை பொறுத்தவரை சாய் சுதர்சன் திறமையான வீரர், அவரிடன் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டைவ் விளையாடும் ஆட்டம் இருக்கிறது. சுதர்சன், ஜெய்ஸ்வால் இருவரும் அணியை தொடங்க வேண்டும், அதற்குபிறகு ஒரு அனுபவ வீரராக கேஎல் ராகுல் அல்லது கருண் நாயர் இருக்க வேண்டும், சுப்மன் கில் 4வது வீரராக களமிறங்குவது தான் இந்தியாவின் திட்டத்திற்கு சரியானதாக இருக்கும்.
அர்ஷ்தீப் சிங் அணியில் இருக்க வேண்டும் - நல்ல ஸ்விங் கிடைக்கும் ஆடுகளங்களான இங்கிலாந்தில் அர்ஷ்தீப் போன்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர் என்னுடைய அணியில் நிச்சயம் இருப்பார். அவரை எடுக்கவில்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன், அவர் கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளார் என்று ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.