
இலங்கையின் பொருளாதார பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருகிறது. இந்த சூழலில் இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங்கே இந்தியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக அவர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார். பயணத்திட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமருடான இந்த சந்திப்பு இந்திய அரசியலிலும் இலங்கை அரசியலிலும் மிக முக்கியமான சந்திப்பாக இருக்கிறது. பொருளாதாரம், பிற நாடுகளுடனான உறவு, கடல்வழிப் போக்குவரத்து, மீனவர் பிரச்சனை என பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பொருளாதார சிக்கலில் இலங்கை இருந்தபோது, அந்த அரசுக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்திருந்தது. ஆகவே இந்தியா - இலங்கை மேலும் நெருக்கமான நாடுகளாக மாற, இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தில் சில விஷயங்களை குறித்து இந்தியா இலங்கையுடன் விவாதிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில், ‘தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து மத்திய அரசு இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்’ என தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
இலங்கை கடற்படை வலைகளை சேதப்படுத்துவது, படகுகளை கைப்பற்றுவது, மீனவர்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மீனவர்கள் புகார் அளித்து வருகின்றனர். ஆகவே இது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார்
இருநாட்டு தலைவர்களின் இன்றைய சந்திப்பு நடைபெறும் சூழலில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழ்நாடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்களை விடுதலை செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே UPI பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும், நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்கவும் இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின