நெடுந்தீவு கடல் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது - தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகளை ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவ சங்க அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீனவர்கள் கைது
மீனவர்கள் கைதுபுதிய தலைமுறை

செய்தியாளர் - ஆனந்தன்

தமிழக மீனவர்கள் 6 பேரை இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்தது இலங்கை கடற்படை. இந்த தொடர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகளை ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவ சங்க அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நேற்று(22.1.2024) காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 480 விசைப்படகுகளில் மீன்வளத்துறையினரால் வழங்கப்பட்ட மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று, சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிகாலை 2 மணி அளவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்து விட்டு நெடுந்தீவு கடல் பகுதி வழியாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பும் போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் படகுகளை நாளாப்புரமும் விரட்டி அடித்தனர்.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளின் மீன்பிடி வலைகளை வெட்டி சேதப்படுத்தி கடலில் தூக்கி வீசியதுடன் மீனவர்களை இரும்பு கம்பியாலும் பிளாஸ்டிக் பைப்புக்களாலும் அடித்து துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இயந்திரம் பழுதாகி கிடந்த ஒரு படகு உட்பட இரண்டு படகுகளையும் படகுகளில் இருந்த ஐசக், சிசேரியன், சமாதான பாபு, சவேரியார் பிச்சை, ஆரோக்கியதாஸ், நிஷாந்த், மோச்சையா, முருகேசன் உள்ளிட்ட 6 மீனவர்களையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை செய்த பின்னர் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டனர்.

மீனவர்கள் கைது
“நாட்டை நேசிக்கிறோம் என இஸ்லாமிய மாணவர்கள் பாடும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்..” - MP கனிமொழி

ஏற்கனவே ஒரே வாரத்தில் கைது செய்யப்பட்ட 40 மீனவர்களை விடுவிக்க இருந்த தருவாயில் அந்த 40 பேரும் விடுவிக்கப் படாமல் இலங்கை சிறைகளில் சித்தரவதைக்குட்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது மீண்டும் ஆறு மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க இருக்கிறார்கள். ஆகவே இலங்கை கடற்படியினரின் தொடர் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்து மீனவ அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், மீனவர் ஒருவர் கண்ணீர் மல்க இது குறித்து தெரிவித்துள்ளனர்.“மீனவனாக பிறந்தது பாவமா? மீனவனாக வாழ்வது பாவமா?. எங்கள் சந்ததியே கடலைத்தான் நம்பிதான் இருக்கிறது. பொதுவான இந்த கடலில் மீன் பிடிக்கவில்லை என்றால் எப்படி எங்களது பசி பட்டினியை போக்கமுடியும்.

எங்களுக்கு அரசாங்க வேலை கிடையாது. இது தவிர எந்த வேலையும் தெரியாது.. நீங்கள் எங்களை அடித்தே துரத்தினாலும் இந்த கடல் தான் எங்களுக்கு எல்லாமும். கடல்தான் எங்களின் பசி பட்டினியை மாற்றும் இதை தவிர மாற்றுவதற்கு வேறு எந்தவழியும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com