உ.பி|அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் மறந்துவைத்த ஸ்பான்ச்..மருத்துவர் தவறால் பறிபோன பெண்ணின் உயிர்!
உத்தரப்பிரதேசத்தில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ய வந்த பெண்ணின் உடலில் அறுவை சிகிச்சை செய்யும் பஞ்ச் சிக்கியதால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிப்பெட் மாவட்டத்தில் மிஷ்ரைன் கௌடியா பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய கீலாவதி சங்கர். இவர் கடந்த ஜூலை 7 ஆம் தேதி அன்று கருப்பையில் ரத்தப்போக்கு அதிகரித்ததன் காரணமாக தேவிபுரா கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை சோதித்த மருத்துவர் டாக்டர் ஆஷா கங்வார், கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, டாக்டர் ஆஷா கங்வா என்பவர் அறுவை சிகிச்சையையும் செய்துள்ளார். பின்னர், ஜூலை 23 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பின்னர், அடிவயிற்றில் கடுமையான வலியையும், வீக்கத்தை அனுபவித்துள்ளார் கீலாவதி.
இதனால், கீலாவதியின் கணவர் உமா சங்கர்ரேலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இவரை அழைத்து சென்று சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் அறுவைச்சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்பான்ச் இருப்பது கண்டறியப்பட்டது.. இதனால், உடல் உள் உறுப்புகளில் வீக்கமும், சீழ்களும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5 ஆம் தேதி என இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால், இரண்டாவது அறுவை சிகிச்சை நடந்த சில மணி நேரங்களிலேயே கீலாவதி உயிரிழந்துவிட்டார் என்று அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், “ சிஎம் ஓ அறிக்கை வந்தப்பிறகுதான் இதுத்தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.