மும்பை | கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற மின்சாரப் பேருந்து.. பரிதாபமாக உயிரிழந்த 6 பேர்!
மும்பையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து ஒன்று, பல வாகனங்களின் மீது தாருமாறாக மோதியநிலையில், 6 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும், 49 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் நேற்றிரவு குர்லா பகுதியில் வழித்தடம் எண் 332 இல் சென்ற பேருந்தை சஞ்சய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததுள்ளது. இதனால், பேருந்து தாருமாறாக அதி வேகத்தில் செல்ல, வழியில் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோ, ரிக்சாக்கள், இரு சக்கர வாகனங்கள், ஒரு போலீஸ் ஜீப் உட்பட பல வானங்களின் மீது மோதியது. மேலும், வழியில் நின்றுக்கொண்டிருந்த சில மக்கள் மீதும் மோதுயுள்ளது. இறுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலின் மீதும் மோதியுள்ளது.
இரவு 9.45 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் 6 பேர் மரணமடைந்துள்ளனர். குறைந்தது 49 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இவர்கள் சியோன் மற்றும் குர்லா பாபா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்கள் கன்னிஸ் அன்சாரி, 55, அப்ரீன் ஷா, 19, அனம் ஷேக், 20, சிவம் காஷ்யப், 18, விஜய் கெய்க்வாட், 70, ஃபரூக் சவுதாரி, 54 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், குறைந்தது நான்கு போலீஸ்காரர்களும் அடங்குவர்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவரில் ஒருவர் கூறுகையில், “ சுமார் 200 மீட்டர் தூரம் பஸ் தாறுமாறாகச் சென்றது. அதன் பிறகே குடியிருப்பு வளாகத்தில் மோதி நின்றது. நான் ரயில் நிலையத்திற்குக் கிளம்பும் போதுபலத்த சத்தம் கேட்டது. உடனடியாக என்ன நடந்தது என்று பார்த்தேன். பாதசாரிகள், ஒரு ஆட்டோ மற்றும் மூன்று கார்கள் உட்பட பல வாகனங்கள் மீது பஸ் மோதி இருந்தது. சாலையில் சிலர் அடிப்பட்டு இருந்தனர். இதையடுத்து நானும் எனது நண்பரும் இணைந்து ஆட்டோவில் காயமடைந்தவர்களை மீட்டு பாபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்" என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் பெஸ்ட் நிறுவனம்தான் மும்பை முழுவதும் மின்சார பேருந்து சேவையை வழங்கி வருகிறது. ஓலெக்ட்ரா என்ற நிறுவனம்தான் இந்த பேருந்தை தயாரித்துள்ளது. இந்த பேருந்துகளைத் தனியார் நிறுவனத்தின் ஓட்டுநர்களே இயக்கி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் விபத்து நடந்த பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு கனரக வாகனங்கள் ஓட்டுவதில் அவ்வளவு பயிற்சி இல்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை குற்றத்திற்கான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மது அருந்தி வாகனம் ஓட்டினாரா என்பது குறித்தும் சோதனை செய்ய ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்ய அனுப்பப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைப்பதைக்க வைத்துள்ளது.