\
Sonia Gandhi Recalls First Meeting With Rajiv Gandhi
சோனியாகாந்திX

”ராஜீவை சந்தித்த அந்த தருணம்” காதல் நினைவுகளை பகிர்ந்த சோனியாகாந்தி!!

ராஜீவ் காந்தியுடனான காதல் வாழ்க்கை மற்றும் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் வரை பதிவு செய்துள்ளார் சோனியாகாந்தி.
Published on: 

‘Belonging: A Journey of Love’ எனப் பெயரிடப்பட்டுள்ள சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்புத்தகத்தில், தனது இளமைக்காலம் தொடங்கி, ராஜீவ் காந்தியுடனான காதல் வாழ்க்கை மற்றும் தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் வரை பதிவு செய்துள்ளார் சோனியாகாந்தி.

இந்நிலையில், புத்தகத்தை அறிமுகப்படுத்தும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை சோனியாகாந்தி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் மாணவியாக இருந்தபோது ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தை தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் தனக்குப் பிடித்த இத்தாலிய உணவுகளைச் சாப்பிடுவதற்கான உணவகத்தைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், அப்போது மாணவர்கள் பலர் செல்லும் கிரேக்க உணவகம் ஒன்றைக் கண்டறிந்ததாகவும், அந்த உணவகத்தில்தான் பொதுவான நண்பர் ஒருவர் மூலம் ராஜீவ் காந்தியைச் சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.

முதன்முதலில் அவரைப் பார்த்தபோதே, அவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தனக்குத் தோன்றியதாகவும், ராஜீவ் காந்திக்கும் அதே உணர்வு இருந்ததைப் பின்னர் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ராஜீவ் காந்தி மிகவும் அழகானவர் என்றும், அவரது மென்மையான குணம் தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரும் நண்பர்களான பின்னர், நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொள்வது, பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்ப்பது எனத் தங்களது உறவு வளர்ந்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தச்சூழலில் தான், ராஜீவ் காந்தியுடனான தனது வாழ்க்கையின் நினைவுகளைப் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, அவரது வரவிருக்கும் புத்தகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Sonia Gandhi Recalls First Meeting With Rajiv Gandhi
பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்.. நுகர்வோரை ஏமாற்றினால் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com