\
Sonam Wangchuk Faces 60-Day Movement Ban in Ladakh: Why?
சோனம் வாங்சுக்Reuters

வீட்டுக் காவலில் சோனம் வாங்சுக்? பரபரப்பு குற்றச்சாட்டு!! லடாக்கில் நடப்பது என்ன?

லடாக்கில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எதிராக போராடி வந்த சோனம் வாங்சுங்கிற்கு 60 நாட்களுக்கு நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on: 

யூனியன் பிரதேசமான லடாக்கில் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அம்மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, நவம்பர் 21-ம் தேதி நகராட்சி மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்களும், டிசம்பர் 4-ம் தேதி லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தலும் நடைபெற உள்ளன.

ஆனால், தற்போது லடாக் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் லடாக்கின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் செல்லும் எனக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேர்தலை நடத்தினால், கடுமையான குளிர் காரணமாக லடாக்கின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படலாம். எனவே, உள்ளாட்சித் தேர்தல்களை ஏப்ரல் அல்லது மே மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட லடாக்கின் பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Reuters

இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி இந்த வாரத் தொடக்கத்தில் லடாக்கின் லே பகுதியில், சோனம் வாங்சுக் போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது, அங்கு வந்த காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, சோனம் வாங்சுக் போராட்டத்தால் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும் என்று போலீசார் தரப்பில், அறிக்கை அளிக்கப்பட்டது. இந்தச்சூழலில் தான், 60 நாட்களுக்கு லே பகுதியில் சோனம் வாங்சுக் நடமாட தடை விதித்து லே-வின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சோனம் வாங்சுக், தான் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தனது வீட்டைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குளிர்காலத்தின் நடுவே, எதற்காக மக்களின் மீது உள்ளாட்சித் தேர்தல் திணிக்கப்பட்டது என கேட்டதற்காகவே இவையெல்லாம் நடப்பதாகவும், தன் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இது சட்டப்பூர்வமான வீட்டுக் காவல் உத்தரவு அல்ல என்றும், தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இணைந்து, “லடாக்கில் இருந்து வரும் அவசர அழைப்பு” எனக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரிடம் உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.

Sonam Wangchuk Faces 60-Day Movement Ban in Ladakh: Why?
“பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு” குற்றஞ்சாட்டிய சோனியா.. அன்னா ஹசாரே பதில்!