“பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு” குற்றஞ்சாட்டிய சோனியா.. அன்னா ஹசாரே பதில்!
Belonging: A Journey of Love என்ற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் சுயசரிதைப் புத்தகம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், அவரது குழந்தைப் பருவம், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடனான காதல், அவசரநிலை காலக்கட்டம், அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைச் சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார். இவ்வாறு, சுயசரிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு விவகாரங்கள் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.
அந்தவகையில் தான், தனது சுயசரிதைப் புத்தகத்தில் 2009 - 2014 காங்கிரஸ் காலக்கட்டத்தின் போது, அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் குறித்துப் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக, கடந்த 2011-ம் ஆண்டு அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற இந்தியா அகில ஊழல் எதிர்ப்பு இயக்கம் (இந்தியா அகென்ஸ்ட் கரப்ஷன்), அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும், மேலும், இந்தப் போராட்டம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் மறைமுகமாக ஒருங்கிணைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டதாகவும், தனது சுயசரிதை புத்தகத்தில் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
இந்தச்சூழலில் தான், சோனியாகாந்தியின் குற்றச்சாட்டுக்கு அன்னா ஹசாரே தற்போது விளக்கமளித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள அவர், பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்றும், தனது முன்னுரிமை நாடு மட்டுமே என்றும் தான் செய்வதெல்லாம் சமூகத்திற்காகவும் நாட்டிற்காகவும் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
மேலும், தனது போராட்டத்தால் மட்டுமே 2014-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறுவதற்கு என்ன அடிப்படை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சோனியா காந்தியைத் தான் இதுவரை சந்தித்ததில்லை என்றும், தன்னை அவர் பார்த்ததும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருவரையொருவர் சந்தித்திராத நிலையில், இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பது எவ்வளவு பொருத்தமானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்னா ஹசாரே போராட்டம்!
2011-ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றது. டெல்லியில் நடைபெற்ற அவரது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, லோக்பால் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அழுத்தம் அதிகரித்தது. இந்தப் பின்னணியில்தான் தற்போது சோனியா காந்தியின் சுயசரிதையில் இடம்பெற்றுள்ள கருத்தும், அதற்கு அன்னா ஹசாரே அளித்துள்ள பதிலும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

