”மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன்கூடிய விடுப்பு அவசியமற்றது”-மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானி

மாதவிடாய் குறித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்து பெண்களிடையே சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் மாதவிடாய் காலம்
பெண்களின் மாதவிடாய் காலம்PT

பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று. சாதாரணமாக 13 வயதில் பூப்பெய்தும் பெண் ஒருவரின் மாதவிடாய் காலமானது குறைந்தது 35 வருடங்கள் வரையிலும் தொடர்ந்திருக்கும். மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு அதிகளவு உதிரப்போக்கும், உடல் உபாதைகளும் தொடர்ந்து இருக்கும். அதனாலேயே பண்டைய காலத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஓய்வெடுக்கும் பொருட்டு வீட்டிலிருந்து விலக்கி வைக்கப்படுவர். ஆனால், இந்த பழக்கமே நாள்போக்கில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையானது. இன்றளவும் அதை எதிர்த்து பெண்கள் போராடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். சமீப காலங்களில் பெண்கள் வீட்டைத் தாண்டி வேலைக்கு என்று வெளியில் செல்லத் தொடங்கியதும், வீட்டுவிலக்கு மாறினாலும், இத்தகைய நாட்களில் பெண்கள் உடல் உபாதைகளுடன் தான் இருப்பர்.

அதனால் வேலையில் கவனமின்மையும், உடல் தளர்ச்சியும் காணப்படும். இதைக் கருத்தில் கொண்டு தான், அலுவலகங்களில் பெண்களுக்கு 3 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், சில தனியார் நிறுவனங்கள் இக்கோரிக்கையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி ”மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல; அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன்.

குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே.

ஆகையால், பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது” என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரின் இத்தகைய கருத்து மக்களிடத்தே, குறிப்பாக பெண்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதனால், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com