15 ஆண்டுகளாக பெட்டிகளில் உறங்கும் 2 லட்சம் அரிய புத்தகங்கள்.. மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?
டெல்லி துளசி சதன் நூலகத்தில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பெட்டிகளிலேயே அடைபட்டுக்கிடக்கிறது. மெட்ரோ ரயில் பணிக்காக, இந்த நூலகம் மூடப்பட்ட நிலையில், இன்றுவரை அதற்கான மறு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதற்கிடையில், டெல்லி தற்போது 'சென்ட்ரல் விஸ்டா' மறுசீரமைப்புத் திட்டத்தால் மத்திய செயலக நூலக அமைப்பே மாற்றத்திற்குள்ளாகி வருகிறது.
டெல்லி துளசி சதன் நூலகத்தில் (Tulsi Sadan Library) சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பெட்டிகளிலேயே அடைபட்டுக்கிடப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மராத்தி உள்ளிட்ட பல இந்திய மாநில மொழிகளின் அரிய இலக்கியப் படைப்புகள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் பழமையான புத்தகங்கள் அந்தச் சேகரிப்பில் அடங்கியிருந்தன எனவும் கூறப்படுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 2010–2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் டெல்லி மெட்ரோவின் மண்டி ஹவுஸ் (Mandi House) ரயில் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக, அப்போதைய நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா (NSD) வளாகத்தில் இயங்கிவந்த டெல்லி துளசி சதன் நூலகத்தின் புத்தகங்கள் அனைத்தும் பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட அலுவலக அறைக்கு மாற்றப்பட்டன.
ஆனால், மெட்ரோ பணிகள் நிறைவடைந்த பின்னரும், இந்தப் புத்தகங்களைப் பிரித்து மீண்டும் வாசகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் தேவையான நிரந்தரக் கட்டட வசதியோ அல்லது மறுசீரமைப்போ செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் தற்போது நடைபெற்று வரும் 'சென்ட்ரல் விஸ்டா' மறுசீரமைப்புத் திட்டத்தால் மத்திய செயலக நூலக அமைப்பே மாற்றத்திற்கு உள்ளாகி வரும் சூழலில், பெட்டிகளில் பூட்டப்பட்டுள்ள இந்த 2 லட்சம் புத்தகங்கள் சேதமடையாமல் பாதுகாப்பாக மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 1972-ஆம் ஆண்டு ராமசரிதமானஸின் 400-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் டெல்லி துளசி சதன் நூலம் திறக்கப்பட்டு, புதுடெல்லியின் பகவான் தாஸ் சாலையில் உள்ள பகவல்பூர் ஹவுஸில் அமைந்த தேசிய நாடகப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்தது. பின்னர், 2011-இல் மண்டி ஹவுஸில் டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் கட்டுவதற்காக இது மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

