கர்நாடகா | முதல்வர் யுத்தத்திற்கு மத்தியில் சத்தமின்றி சாதனை படைத்த சித்தராமையா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா, மாநிலத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற வரலாறு படைக்கவுள்ளார். இதற்கு முன்பு டி.தேவராஜ் அர்ஸ் வைத்திருந்த சாதனையை அவர் முறியடிக்கவுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் ஏற்கெனவே முதல்வர் யுத்தம் நடைபெற்றும் வரும் நிலையில், கர்நாடகாவின் நீண்டகால முதல்வர் என்ற சாதனையை சித்தராமையா படைக்கவுள்ளார். மாநிலத்தின் முன்னாள் முதல்வரான டி.தேவராஜ் அர்ஸ் இரண்டு முறை இந்தப் பதவியில் இருந்தார். அவர், ஏழு ஆண்டுகள் 239 நாட்கள் பதவியில் இருந்தார். அர்ஸ் 1972 முதல் 1977 வரையிலும், 1978 முதல் 1980 வரையிலும் முதலமைச்சராகப் பணியாற்றிய அதே வேளையில், சித்தராமையா 2013-18 ஆம் ஆண்டு முழு பதவிக் காலத்தையும் வகித்த பிறகு, மே 2023 முதல் அந்தப் பதவியை வகித்து வருகிறார். நாளையுடன் (ஜன.7) ஏழு ஆண்டுகள் 240 நாட்கள் என்கிற நிலையில், சித்தராமையா டி.தேவராஜ் அர்ஸின் சாதனையை முறியடிக்கவுள்ளார். இதன்மூலம் மாநிலத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற வரலாறை சித்தராமையா படைக்கவுள்ளார்.
காங்கிரஸைச் சேர்ந்த எஸ். நிஜலிங்கப்பா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர், ஏழு ஆண்டுகள் மற்றும் 175 நாட்கள் என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். நிதித்துறையையும் வைத்திருக்கும் சித்தராமையா, இதுவரை அதிக எண்ணிக்கையிலான (16) மாநில பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த சாதனையைப் படைத்துள்ளார். இரண்டு முறை துணை முதல்வராகப் பணியாற்றிய சித்தராமையா, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1983 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டமன்றத்தில் நுழைந்தார்.

