”இங்க இருக்கு வானம்.. அத எட்டி பிடிக்கவா நானும்” - வெற்றிகரமாக பூமி திரும்பிய சுபான்ஷூ சுக்லா!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியை வந்தடைந்தார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட சுபான்ஷூ சுக்லாவும் அவரது குழுவினரும், ட்ராகன் விண்கலம் மூலம் பூமிக்கு வந்தடைந்தனர். விண்கலம் கடலில் தரையிறங்கிய நிலையில் அதற்குள் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷூ சுக்லா 18 நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். ISSல் ISRO வழங்கிய ஏழு மைக்ரோகிராவிட்டி சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார்.
கலிபோர்னியாவின் சான் டியாகோவில் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி அளவில் தரையிறங்கியது. விண்கலம் தரையிறக்கப்பட்டதை அடுத்து விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியில் வந்தனர்.
காப்ஷ்யூலில் இருந்து முதலில் வெளியில் வந்தவர் விட்சன். அவருக்கு அடுத்ததாக சுக்லா வெளியில் வந்தார். போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் டிராகன் விண்கலத்திலிருந்து அடுத்தடுத்து வெளியேறினர்.
சுக்லாவின் பயணம் தொடர்பாக பிடிஐயிடம் பேசிய சுக்லாவின் தந்தை ஷம்பு தயாள் சுக்லா, “சுபன்ஷுவின் பணி வெற்றிகரமாக இருந்ததும், அவர் பாதுகாப்பாக தரையிறங்கியதும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். இதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடி சுக்லாவின் பயணத்திற்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பூமிக்கு திரும்பிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் சேர்ந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுவந்த இந்தியாவின் முதலாவது விண்வெளி வீரராக, அவருடைய அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் முன்னோடி மனப்பான்மையின் மூலம் அவர் கோடிக்கணக்கான கனவுகளுக்கு உயிரூட்டியுள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த சுபான்ஷூ சுக்லா
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி பிறந்தவர். சிறுவயதில் இருந்தே விண்வெளி தொடர்பாகவும் விமானம் தொடர்பாகவும் சுக்லாவிற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. கடந்த 2005ம் ஆண்டு ராணுவ பயிற்சியை முடித்து, தேசிய பாதுகாப்பு அகாடமியில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டமும் பெற்ற சுக்லா இந்திய அறிவியல் கழகத்தில் பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக சேர்ந்தார்.
Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk உட்பட பல்வேறு போர் விமானங்களை இயக்கி இருக்கும் சுபான்ஷு, சுமார் 2 ஆயிரம் மணி நேரத்திற்கு போர் விமானங்களை இயக்கிய அனுபவமிக்க நபராக மாறி இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு இஸ்ரோவிடமிருந்து அழைப்பைப் பெற்ற சுக்லா, விண்வெளி மருத்துவ நிறுவனத்தால் (IAM) விண்வெளி வீரர் தேர்வு செயல்பாட்டிலும் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வீரர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். பின்னர், சுக்லாவிற்கு முழு விண்வெளி வீரராவதற்கான அனைத்து பயிற்சிகளும், (கடந்த 2020 டூ 2021ம் ஆண்டில்) ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஸ்டார் சிட்டியில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டுள்ளது. தொடர் பயிற்சிகளின் மூலம் ஒரு முழு விண்வெளி வீரராக மாறிய சுபான்ஷு, ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
விண்வெளி துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் ஆர்வம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் தரப்பில், “ககன்யான் திட்டத்திற்கு சுக்லாவின் இந்த பயணம் முக்கிய மைல்கல்லாக விளங்கும். இந்தியாவின் உள்நாட்டு விண்கல உற்பத்திக்கும் சுக்லாவின் இந்தப் பயணம் உதவும். சுக்லாவின் ஆர்வம் மற்றும் துடிப்பு, விண்வெளி ஆய்வில் இந்தியாவின் கனவை பிரதிபலிக்கிறது. இந்த பயணம் இந்தியாவின் விண்வெளிக் கனவுகளையும் நீரூபிக்கும் களமாக இருந்தது.
இந்தப் பயணம் விண்வெளி ஆய்வில் இந்தியாவின் ஒத்துழைப்பு, தலைமைத்துவம் ஆகியவற்றைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தது.