ம.பி. |ஒரே நபர் 30 முறை பாம்பு கடித்து இறந்ததாக போலிச் சான்றிதழ்.. ரூ.11 கோடி மோசடி!
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அவற்றின்மூலம் அவர்கள் மாதந்தோறும் நிதியுதவி பெற்று வருகின்றனர். எனினும், இதைத் தவறாகப் பயன்படுத்துவோரும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில்கூட, பெண் ஒருவர் திருமண நிதியுதவி பெற போலியாய் திருமணம் செய்த விஷயம் வெளியில் தெரிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு நிதியுவியைப் பெறுவதற்காக பாம்பு கடித்து இறந்ததாக, போலியாய்ச் சான்றிதழ் தயாரித்து நிதி பெற்ற மோசடிக் கும்பல் பற்றிய தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டம், கியோலாரி தாலுகாவைச் சேர்ந்தவர் தரம் சச்சின் தஹாயக். இவர், பாம்பு கடித்து இறந்தவர்கள், நீரில் மூழ்கி பலியானவர்கள், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள், பயிர் இழப்பீடு எனப் பல்வேறு கோரிக்கைகளுக்கு அவர் அரசாங்க நிதியுதவியைப் போலிச் சான்றிதழ்கள் மூலம் பெற்றுள்ளார். இதில் ரமேஷ் என்பவர் பாம்பு கடித்து 30 முறை இறந்ததாகவும், ராம்குமார் என்பவர் 19 முறை இறந்ததாகவும் போலிச் சான்றிதழ் கொடுத்து பணம் பெறப்பட்டுள்ளது. இதுதவிர, நீரில் மூழ்கி இறந்ததாகவும், மின்னல் தாக்கி பலியானதாகவும் போலிச் சான்றிதழ் தயாரித்து, அதாவது ஒரே இறப்பு பதிவுகளை பலமுறை பயன்படுத்தி நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இந்தப் பதிவுகள் மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு, அரசாங்க நிதியை தனியார் கணக்குகளுக்கு மாற்ற புதிய பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி 2019 முதல் 2022 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் ரூ.11.26 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது. இந்தப் பணத்தை, சச்சின் தஹாயக் தனது உறவினகள், நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செலுத்திப் பெற்றுள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இறப்புச் சான்றிதழ்கள், காவல்துறை சரிபார்ப்பு அல்லது பிரேதப் பரிசோதனை உள்ளிட்ட அறிக்கைகள் இல்லாமலேயே இந்த பில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் அப்போதைய துணை முதல்வர் அமித் சிங் மற்றும் 5 தாசில்தார்கள் உட்பட மொத்தம் 46 பேர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஜபல்பூர் பிரிவின் நிதித் துறையைச் சேர்ந்த சிறப்புக் குழுவால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 47 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய சச்சின் தஹாயக் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.