பறப்பதற்கு அனுமதியை கேட்காதீர்கள்... சசி தரூர் போட்ட பதிவு; கார்கேவிற்கு பதிலடியா?
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரப்பூர்வமாக உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு குழுக்களை அமைத்தது. அதில், அனைத்து கட்சி எம்.பி க்கள் அடங்கிய குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்றன. அவற்றில் சசி தரூர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு சசி தரூர் தலைமையிலான குழு கடந்த மாதம் சென்றது. அந்நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகளை சந்தித்து பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து எடுத்துரைத்து வெற்றிகரமாக நாடு திரும்பினார் சசி தரூர்.
இந்தநிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றில் எம்பி. சசி தரூர், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து மோடிக்கு புகழாரம் சூட்டும் வகையில், கட்டுரையில் ஒன்றினை எழுதியிருந்தார்.
அதில், “பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு ஆகியவை சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய சொத்தாக இருந்தன" என கூறியிருந்தார். இந்த கட்டுரை பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு விளக்கமளித்திருந்த சசி தரூர் , இது தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்பதன் பிரதிபலிப்பே தவிர பாஜகவில் சேர்வதற்கு அல்ல என விளக்கியிருந்தார்.
ஆனால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்றைய தினம் , “சசி தரூர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். என்னால் ஆங்கிலம் சரியாக படிக்க இயலாது. அவருடைய மொழி மிகச் சிறப்பு. அதனால்தான் அவரை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமித்தோம். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட ராணுவத்துக்கு ஆதரவு அளித்தோம். நாடுதான் முதல், கட்சி பின்னர்தான் என நாங்கள் சொல்கிறோம். ஆனால், சிலர் மோடிதான் முதல், நாடு என்பது பிறகுதான் என கருதுகின்றனர். என்ன செய்ய முடியும்" என சசி தரூரை மறைமுகமாக சாடியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு சசி தரூர் மறைமுகமாக பதிலளிக்கும் வகையில், பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , “ பறப்பதற்கு அனுமதியை கேட்காதீர்கள் சிறகுகள் உங்களுடையது, வானம் யாருக்கும் சொந்தமானது இல்லை... ” என ஒரு பறவையின் படத்தோடு இந்த வாசகங்களையும் பதிவிட்டுள்ளார்.