காங்கிரஸ் கட்சியுடன் கருத்து வேறுபாடா? - வெளிப்படையாக சசி தரூர் கொடுத்த பதில்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, ’ஆபரேஷன் சிந்தூர்' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த அவர், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசைப் பாராட்டிப் பேசி வருகிறார். இது, தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஆனால், இந்த தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் பிரசாரம் செய்ய சசி தரூர் செல்லவில்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது.
தற்போது இதுதொடர்பான கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அவர், ”நான் கட்சித் தொண்டர்களுடன் கடந்த 16 வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். அவர்களை நெருங்கிய நண்பர்களாக, சகோதரர்களாகப் பார்க்கிறேன். காங்கிரசில் உள்ளவர்களுடன் எனது உறவு வலுவாக உள்ளது.
எனினும், எனக்கும், சில தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றதால், வெளிநாடுகளுக்குச் சென்றேன். திரும்பி வந்த பிறகு, பிரசாரத்திற்கு வர வேண்டும் என கட்சியினர் யாரும் என்னை அழைக்கவில்லை. அழைப்பு இல்லாத இடத்துக்கு நான் செல்ல மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.