காத்மாண்டு | ஒரே மாதத்தில் 9 ராஜநாகம், ஒரு கோப்ரா கண்டுபிடிப்பு - எவரெஸ்ட் செல்வோருக்கு அபாயம்!
நேபாள நாட்டின் தலைநகராகவும் உலக மக்களைக் கவர்ந்திழுக்கும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது, காத்மாண்டு. இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதிகளில் அதிகளவில் ராஜநாக பாம்புகளும், ஒரு கோப்ராவும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காத்மாண்டுவிற்கு அருகில்தான் இமயமலையும் உள்ளது. அங்குள்ள எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 160 கி.மீ. தொலைவில்தான் இத்தகைய பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 9 ராஜநாகப் பாம்புகளும் மற்றும் 1 கோப்ராவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் அங்குள்ள நெல் வயல்கள் மற்றும் சதுப்புநிலப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
இப்படி, எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றி ராஜநாகப் பாம்புகள் இருப்பது புதிய செய்தியல்ல என்கின்றனர், நிபுணர்கள். புவி வெப்பமடைதலின் காரணமாக அவைகள் இவ்விடத்தை நோக்கி நகருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் பிரதேசங்களுக்குள் இத்தகைய பாம்புகள் இயற்கைக்கு மாறாக இடம்பெயர்வது வெறும் தற்செயலானது அல்ல என்றாலும், காலநிலை மாற்றம் காரணமாக அவைகள் இயற்கையான வாழ்விடங்களிலிருந்து வெளியேறுகின்றன.
நேபாளத்தின் மலைப்பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை இதற்கு முக்கியக் காரணமாகும் என்கின்றனர், நிபுணர்கள். மேலும், தாழ்வான டெராய் பகுதியிலிருந்து மேல் பகுதிகளுக்கு லாரிகளில் மரம் அல்லது வைக்கோல் கொண்டு செல்லப்படும்போது, இத்தகைய பாம்புகள் கவனக்குறைவாக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.