”மோடி ஓய்வு பெற வேண்டிய நேரம் இது” - சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்!
பிரதமர் நரேந்திர மோடி, ஒரு வார கால சுற்றுப் பயணமாக ஸ்லோவேகியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, பிரான்சில் 52-வது ஜி7 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இன்று மற்றும் நாளை நடைபெறும் அமர்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளவுள்ளார். ஜி7 அமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாத நிலையில், சிறப்பு அழைப்பாளராக கடந்த சில ஆண்டுகளாக இந்திய கலந்துகொண்டு வருகிறது.
இந்தசூழலில் தான், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேசப்பற்றுள்ள இந்தியர்கள் அனைவரும் இணைந்து பிரதமர் மோடியை பதவியிலிருந்து ஓய்வு பெறக் கோர வேண்டிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, ஜி7 அமைப்பில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாதபோதும், பிரதமர் மோடி அங்கு ஒரு "பார்வையாளராக" மட்டுமே சென்றுள்ளார். அமெரிக்கா மற்றும் சீனாவால் இந்திய நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த அவமதிப்பு, ஒட்டுமொத்த 'பாரத மாதாவுக்குமான' அவமானம் என்று அவர் சாடியுள்ளார். "யாரும் உள்ளே நுழையவில்லை" என்ற அலட்சியமான போக்கைக் கையாண்டு, இந்தியாவின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட, நமது சொந்த நிலப்பகுதியை பிரதமர் மோடி சீனாவிற்கு தாராளமாக விட்டுக் கொடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் சர்வதேசப் பயணங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு உத்திகள் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரே இவ்வாறு பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

