பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவிய நிலையில், இன்று பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் நிதிஷ்குமார். இதன் பின் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், “ராஜினாமா செய்துவிட்டேன். பல்வேறு தரப்பிடம் வந்த கோரிக்கையின் அடிப்படையிலும், அரசியல் சூழல் காரணமாகவும் லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன். லாலு காங்கிரஸ் உடனான மகா கூட்டணி ஆட்சி முறிந்துவிட்டது. விரைவில் புதிய கூட்டணியை அமைப்பேன். பாஜக உடனான கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 4 ஆவது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார் நிதிஷ்குமார்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது, “என்னாலும் இதை நம்பமுடியவில்லை. எல்லோரும் சந்தர்ப்பவாதத்தை முன்வைத்தே அரசியல் செய்கிறார்கள். குறிப்பாக நிதிஷ்குமார் செய்வதுதான் மிகப்பெரிய ஆச்சரியமாகவும், மிகப்பெரிய கேள்வியாகவும் இருக்கின்றன.
அவரெல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் அரசியல் கற்றவர்கள், அவரது கொள்கையை உள்வாங்கியவர். இளம் துருக்கியர்கள் என்றெல்லாம் அவரைப் பற்றி பேசியதை எல்லாம் பொய்யாக்கிவிட்டு இப்படி செய்வாரா என்று இன்னும் கூட என்னால் நம்பமுடியவில்லை.
ஏற்கனவே அவர் பாஜக உடன் இருந்து முரண்பட்டு, இந்த தேசத்திற்கு பாஜக துரோகங்களை செய்துவருகிறது என்றெல்லாம் அறிக்கை கொடுத்துவிட்டு, லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் இணைந்து கூட்டணி மந்திரிசபையை அமைத்தார். அவர் பேசியதெல்லாம் இன்னும் பதிவில் இருக்கின்றது. யாரும் மறக்கவில்லை. மறுக்கவும் முடியாது.
ஆனால் இப்போது முதலமைச்சர் பதவியை லாலு பிரசாத் கட்சியிடம் கொடுக்க வேண்டும் எனும் நிலை வரும்போது அதைக் கொடுக்காமல், தானே மீண்டும் முதலமைச்சராக வேண்டும்; தன் கட்சிதான் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என முடிவெடுத்து, அவர் பாஜக உடன் செல்கிறார் என்றால் பீகார் மக்களுக்கு அவர் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.