4 மாநிலங்களில் இன்று நடைபெற இருந்த போர் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைப்பு!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் இந்திய ராணுவத்தின் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, பல மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவதற்கான பணிகளில் வீரர்கள் தயாராகி வந்தனர். அப்போது, மே 7ஆம் தேதி நள்ளிரவு, ’ஆபரேசன் சிந்தூர்’ என்கிற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா நாடுகளின் தாக்குதல் முடிவுக்கு வந்தன. இந்த நிலையில், மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என நேற்று அறிக்கப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், ஹரியான உள்ளிட்ட 4 மாநிலங்களில் இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஹரியானா அரசு, தன் மாநிலத்தின் அவசரகால தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக, இன்று (மே 29) மாலை 5 மணி முதல் 22 மாவட்டங்களிலும் ’ஆபரேஷன் ஷீல்ட்’ என்ற பெயரில் ஒரு பெரிய பாதுகாப்பு ஒத்திகையை நடத்த இருந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பஞ்சாப் அரசு ஜூன் 3ஆம் தேதி போர் ஒத்திகை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.