பாகிஸ்தான் எல்லையில் உள்ள 4 இந்திய மாநிலங்களில் நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் இந்திய ராணுவத்தின் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என அறிவித்தது. அதன்படி, பல மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவதற்கான பணிகளில் வீரர்கள் தயாராகி வந்தனர். அப்போது, மே 7ஆம் தேதி நள்ளிரவு, ’ஆபரேசன் சிந்தூர்’ என்கிற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.
இது, யாருமே எதிர்பாராத வகையில் இருந்ததால், உலகத்துக்கு இந்தச் செய்தி அதிர்ச்சி தருவதாக இருந்தது. தவிர, பாகிஸ்தான் ராணுவமும் இந்தியாவின் இந்தச் செயலை எதிர்பார்க்கவில்லை. அதாவது, இந்திய ராணுவம் ஒத்திகையில்தானே ஈடுபடப்போகிறது எனக் கணக்கிட்டிருந்தது. ஆனால், கடைசியில் இந்திய ராணுவத்தின் தந்திரத்தைக் கண்டு ஏமாந்துபோனது.
இந்த நிலையில், மீண்டும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என அறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹரியானா அரசு, தன் மாநிலத்தின் அவசரகால தயார்நிலை மற்றும் பதிலளிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக, நாளை (மே 29) மாலை 5 மணி முதல் 22 மாவட்டங்களிலும் ’ஆபரேஷன் ஷீல்ட்’ என்ற பெயரில் ஒரு பெரிய பாதுகாப்பு ஒத்திகையை நடத்த இருக்கிறது.
இந்தப் பாதுகாப்பு ஒத்திகையில், தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC), தேசிய சேவைத் திட்டம் (NSS), நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) மற்றும் பாரத் ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு வார்டன்கள், பதிவுசெய்யப்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் பெரிய அளவில் அணிதிரட்டப்படும் என்று உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுமிதா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.