இனி வாரத்தில் 2 நாட்கள் காணொளி காட்சி மூலம் விசாரணை.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு!
மத்திய கிழக்கு பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் நெருக்கடி, விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற சூழலில், பிரதமர் மோடி சிக்கனத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் வாரத்தில் இரண்டு நாட்கள் முழுக்க காணொளி காட்சி வழி விசாரணை, மற்ற நாட்களில் ஹைபிரிட் முறை, பணியாளர்களில் 50% பேர் வீட்டிலிருந்து பணிபுரிதல், நீதிபதிகள் ஒரே காரில் பயணம் போன்ற நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
ஈரான்- அமெரிக்கா போர்ச்சூழல் தணியாத நிலையில் அதன் வெப்பம், பல்வேறு நாடுகளிலும் உணரப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக, பொருளாதார நெருக்கடிகளை நாடு எதிர்கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது. சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ள சூழலில், உச்சநீதிமன்றம், நீதிமன்றப்பணிகள் குறித்த முக்கிய முடிவை அறிவித்துள்ளது.
மத்தியக்கிழக்கில் நிலவும் பதற்ற நிலை காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட தொடங்கியுள்ளது. ரூபாய் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து எரிபொருள் வருவதில் நிலவும் பிரச்னையால், வணிக சிலிண்டர்கள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.
இந்நிலையில் அண்மையில் கூட்டமொன்றில் பேசிய பிரதமர் மோடி, தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் வொர்க் பிரம் ஹோம் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை விடுத்தார். சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையேற்று பல்வேறு மாநிலங்களும் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இச்சூழலில், உச்சநீதிமன்றமும் சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, உச்சநீதிமன்றம் வாரத்தில் 2 நாட்கள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தின் விசாரணை மற்றும் இதர பணிகள் காணொளி காட்சி மூலம் நடைபெறும் எனவும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் காணொளி காட்சி மூலமும், நேரடியாகவும் என ஹைபிரிட் முறையில் நீதிமன்றப் பணிகள் நடைபெறும் எனவும் சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நீதிமன்ற பணியாளர்களில் 50% பேர் தேவைக்கு ஏற்ப வீட்டிலிருந்து தங்களது பணியை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பதிவாளர் அறிவுறுத்தியுள்ளதோடு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒன்றாக கார்களில் பயணிக்குமாறும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இத்தகைய நடைமுறைகள் உச்சநீதிமன்றத்தில் அமலில் இருக்கும் எனவும் உச்சநீதிமன்ற பதிவாளர் அவரது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

