இந்திய கால்நடை வளர்ப்போருக்கு ஆபத்து.. SBI எச்சரிக்கை!
இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் முனைப்பு காட்டி வருகின்றன. தங்கள் விவசாய விளைபொருட்கள், பால் பொருட்களுக்கு இந்தியா தனது சந்தையை திறக்கவேண்டும் என அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாகத்தான் ஒப்பந்தம் இறுதியாவதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்க பால் பொருட்களுக்கு இந்திய சந்தை திறக்கப்பட்டால் இங்குள்ள கால்நடை வளர்ப்போர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என அதில் கூறப்பட்டுள்ளது, அமெரிக்காவில் பால் பொருட்களுக்கு மிகப்பெரிய அளவில் மானியம் வழங்கப்படுவதால் அவை இந்திய சந்தைகளில் எளிதாக ஊடுருவ முடியும் என அந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவில் பால் விலை 15% வீழ்ச்சியடையும் என்றும் இதனால் கால்நடை வளர்ப்போருக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்றாக கால்நடை வளர்ப்பு உள்ளதையும் இதனால் 8 கோடி பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுவதையும் கணக்கில் கொள்ளவேண்டும் என அந்த அறிக்கை கூறியுள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய மத்திய அரசு அதிகாரிகள் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.