SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக்! கசிந்த தனிப்பட்ட விவரங்கள்.. சைபர் பாதுகாப்பு விசாரணை தீவிரம்!
STATE BANK OF INDIA வங்கியின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் ல் கசிந்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னென்ன தகவல்கள் வெளியாகியுள்ளன என விரிவாக பார்க்கலாம்...
பல்வேறு துறைகளில் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI ன் வாடிக்கையாளர்களளின் தனிப்பட்ட தகவல்கள் DARK WEB ல் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வங்கி நடத்திய முதற்கட்ட ஆய்வில், இணையத்தில் கிடைத்த சுமார் மூன்றரை லட்சம் பதிவுகளில், 3,897 வாடிக்கையாளின் தனிப்பட்ட விவரங்கள் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து SBI தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
அக்டோபர் 16-ம் தேதி, டார்க் வெப்பில் SBI வாடிக்கையாளர்களின் தகவல்கள் இருக்கலாம் என்று இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்பிடம் இருந்து எச்சரிக்கை கிடைத்திருக்கிறது. அதன் பிறகு, சம்பந்தப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்த SBI, தகவல் கசிவு தொடர்பான விசாரணையைத் தொடங்கி உள்ளது.
இதனையடுத்து, SBI-யின் ஆரம்பகட்ட ஆய்வில் வாடிக்கையாளர்களின் பெயர் மொபைல் எண், பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் முகவரி, வீட்டின் முகவரி, வங்கிக் கிளை விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் சில பதிவுகளில் இருந்தது தெரியவந்துள்ளது. கடன் விண்ணப்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பான ஆவணங்களின் விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கசிந்த தனிப்பட்ட தகவல்களால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது முக்கியமான அச்சுறுத்தாளாக உள்ளது. ஒருவரின் பெயர், மொபைல் எண், வங்கிக் கிளை அல்லது கடன் விண்ணப்பம் தொடர்பான விவரங்கள் தெரிந்தால், மோசடி செய்பவர்கள் வங்கி அதிகாரிகளைப் போலத் தொடர்புகொண்டு நம்ப வைக்க முயற்சி செய்யலாம். வங்கி கணக்கில் பிரச்சினை இருப்பதாகவோ அல்லது கடன் விண்ணப்பத்தைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறி OTP, PIN, கடவுச்சொல் போன்ற ரகசியத் தகவல்களைக் கேட்கும் அபயாயம் உள்ளது. தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி நம்பகமானதாகத் தோன்றும் போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளையும் அனுப்ப வாய்ப்புள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, OTP, PIN, கடவுச்சொல் போன்ற ரகசிய விவரங்களை யாரிடமும் பகிராமல் இருக்க வேண்டும். வங்கி ஊழியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அழைப்பவர்களிடம் பேசும்போது, அவர்களின் அடையாளத்தைச் சரிபார்த்து பேச வேண்டும். சந்தேகத்திற்குரிய இணைப்புகளைத் திறப்பதையோ, தெரியாத செயலிகளைப் பதிவிறக்குவதையோ தவிர்க்க வேண்டும். வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை தென்பட்டால், SBI-யின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து SBI தகவல் கசிவின் உண்மைத்தன்மை, பாதிப்பின் முழு அளவு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை மதிப்பிடுவதற்காக, சுயாதீன சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை நியமித்துள்ளது. மேலும், சைபர் சம்பவத்தைக் கையாளவும் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் தேவையான நடைமுறைகளைச் செயல்படுத்தியிருப்பதாகவும் SBI தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் வங்கியின் முக்கியச் செயல்பாடுகள், நிதிச் செயல்திறன் அல்லது வணிகத் தொடர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு இல்லை என்றும் SBI கூறியுள்ளது.
ஆனால், வாடிக்கையாளர் தகவல்கள் எந்த வழியில் வெளியேறின, அதன் முழுமையான அளவு என்ன, மேலும் யாருக்கெல்லாம் பாதிப்பு இருக்கலாம் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணை தொடர்கிறது.
