மும்பை தாக்குதல் குற்றவாளி | ”பீகார் தேர்தலின்போது தூக்கிலிடப்படுவார்” - சஞ்சய் ராவத்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவரை கைது செய்தது. மேலும் 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ”பாஜக இதை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும்” என்று உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும். ஆனால் அவர் பீகார் தேர்தலின் போது தூக்கிலிடப்படுவார். ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது. எனவே ராணாவை மீண்டும் கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட முதல் குற்றவாளி ராணா அல்ல. கடந்த காலங்களில், 1993 தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி அபு சலீமும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்" என்று கூறினார்.
பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி, காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. பாஜக-ஜேடியு கூட்டணி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியைக் கோரும் வகையில், பாஜக தனது வாக்கு எண்ணிக்கையை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் கருத்துக்கள் வந்துள்ளன.