”இந்தியாவில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம்” - சஜ்ஜன் ஜிண்டால் கருத்தால் கிளம்பிய விவாதம்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அந்நாட்டில் அரசாங்கத் திறன் (DOGE) எனும் ஒரு புதிய நிர்வாகத் துறை தொடங்கப்பட்டது. இதைக் கவனிக்கும் பொருட்டு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் இந்தியாவிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த உள்ளார். அதற்கான பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது இதுகுறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், முன்னணியில் இருக்கும் அவருடைய டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவிலும் தடம் பதிக்க உள்ளன. இதற்கான விற்பனை மையம் முதற்கட்டமாக மும்பையில் தொடங்கப்படுகிறது. அதற்கான அனைத்துப் பணிகளும் கடந்த வாரம் நிறைவு பெற்றதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, ”இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம்” என்று தொழிலதிபரும் JSW ஸ்டீல் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “டெஸ்லா நிறுவனர் அறிவாளிதான்; அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்காக, அவர் இந்தியச் சந்தையில் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு, இந்தியாவின் களச் சூழல் மற்றும் இந்தியாவின் தேவை குறித்து தெரியாது.
நாங்கள் இங்கேயே இருக்கிறோம். மஹிந்திரா, டாடா செய்யக்கூடியதை எலான் மஸ்க்கால் செய்ய முடியாது. அது சாத்தியமுமில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிழலிருக்கும் அவரால் நினைத்ததை செய்ய முடியும். ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ராக்கெட்கூட அவர் செலுத்தலாம். ஆனால், இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல’’ என அவர் தெரிவித்துள்ளார்.
சஜ்ஜன் ஜிண்டாலின் இந்தக் கருத்து, இணையத்தில் எதிர்வினையாற்றியுள்ளது. அவருடைய கருத்துக்கு பயனர்களும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், “பத்தாண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க தொழிலதிபர்கள், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் நாசாகூட, எலான் மஸ்க் மீது இதே சந்தேகங்களை எழுப்பினர். ஆனால், அவை அனைத்தும் தவறு என்று நிரூபிக்கப்பட்டன. பின்னடைவுகள் இருந்தபோதிலும் தங்கள் இலக்குகளை இடைவிடாமல் பின்தொடர்பவரை நீங்கள் தோற்கடிக்க முடியாது. முடிவுகளை எடுப்பதற்கு முன் இரண்டு முறை சிந்தியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “அவர் சொல்வது சரிதான். ஏன் என்று நீங்கள் யோசித்தால், கடந்த காலத்தைப் பாருங்கள். ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஏன் இந்தியாவில் தங்கள் வணிகத்தை மூடின. கார் சந்தையைப் பொறுத்தவரை, இந்தியர்கள் ஜப்பான் அல்லது தெற்கு கொரியா போன்ற ஆசிய கார்களுடன் அதிகம் இணைந்திருக்கிறார்கள், ஆனால் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவுடன் அல்ல” எனப் பதிவிட்டுள்ளார். மூன்றாவது நபரோ, “இந்த கருத்தைக் கேட்பதில் மகிழ்ச்சி. நம்மிடம் சிறந்த கார்கள் இருந்தால், டெஸ்லா, பிஒய்டி, டொயோட்டா போன்ற உலகெங்கிலும் அவற்றை ஏன் விற்க முடியவில்லை? நீங்கள் உண்மைகளை மறுத்து கைதட்டல்களைப் பெறலாம். இந்தியாவில் டெஸ்லாவை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.