இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்கள் உற்பத்தி.. அதிருப்தி ட்ரம்ப்! நடந்தது என்ன?
அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சந்தித்து பேசியிருந்தார். அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ஆலையில் இருந்து டெஸ்லா கார்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனையை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக, மும்பையின் BKC வர்த்தக மையம் மற்றும் டெல்லியில் உள்ள ஏரோசிட்டியில் டெஸ்லா ஷோரூம்கள் திறக்கப்ப்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெஸ்லா கார்கள் இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், தங்களின் மின்சார வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான எந்த உறுதியையும் டெஸ்லா இதுவரை அறிவிக்கவில்லை. அதேநேரம், இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து உபகரணங்களை வாங்கும் திட்டம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சமூக வலைதளமான லிங்க்டன் (LINKEDIN) தளத்தில் மும்பையை மையமாக வைத்து 13 முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விற்பனை ஆலோசகர், நுகர்வோருக்கான ஆதரவு நிபுணர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர், வணிக செயல்பாடு ஆய்வாளர், கடை மேலாளர், உதரிபாகங்களுக்கான ஆலோசகர், வாடிக்கையாளர்களுக்கான மேற்பார்வையாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
டெஸ்லா நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய கடும் முயற்சிகளை டெஸ்லா நிறுவனம் மேற்கொண்டபோது, மத்திய அரசின் அதிகப்படியான இறக்குமதி வரி அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.
இந்தச் சூழலில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான வரிகள் கணிசமாக குறைக்கப்பட்டன. இது முதற்காரணம் என்றாலும், அமெரிக்காவில் எலான் மஸ்க் - பிரதமர் சந்திப்பு ஆகியன இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு காராணமென கூறப்படுகிறது.
மறுபுறம், இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவது சம்பந்தமாக ட்ரம்ப், "எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவது ஓகேதான்... ஆனால், அது அமெரிக்காவிற்கு நியாயமற்றது ஆகும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நம்மைப் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் அதை அதிக வரிகளுடன் செய்கிறார்கள். உதாரணமாக, இந்தியாவில் நாம் ஒரு காரை விற்பனை செய்வது சாத்தியமற்றது” எனத் தெரிவித்துள்ளார்.