ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. மீண்டும் திறக்கப்படும் சபரிமலை நடை.. 21ம் தேதி வரை அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 41 நாட்களில் தினமும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். தொடந்து கடந்த 27ம் தேதி 451 பவுன் தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது. அதோடு 41 நாட்கள் நீண்ட மண்டல கால மகோற்சவம் நிறைவற்றது. மண்டல பூஜைக்காலத்தின் 41 நாட்களில் 35 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சுமார் 204 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக தேவஸ்தானத்தின் தலைவர் கூறினார்.
இந்நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சபரிமலை தீபம் ஏற்றப்பட்டு நடை திறக்கப்படும். 2024 ஜனவரி 15ஆம் தேதி சபரிமலையில் மகரசங்கரம பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கும். தொடர்ந்து, ஜனவரி 20ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். ஜனவரி 21ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினரின் தரிசனத்திற்கு பின் சபரிமலை நடை மீண்டும் அடைக்கப்பட்டு கோயில் சாவி அவர்களது குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும்.
அத்துடன் மகர விளக்கு பூஜை காலமும் நிறைவுறும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல காலத்தை விட, மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன.