மணிசங்கர் ஐயர், சுரண்யா ஐயர்
மணிசங்கர் ஐயர், சுரண்யா ஐயர்pt web

”ராமர் கோயில் விழாவை எதிர்ப்பதா? குடியிருப்பை காலி செய்யுங்கள்”-மணிசங்கர் அய்யர் மகளுக்கு நெருக்கடி?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் மற்றும் அவரது மகள் சுரண்யா ஐயர் டெல்லியில் உள்ள அவர்களது வீட்டை காலி செய்ய வேண்டுமென்று அவர்களது குடியிருப்பு நலசங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யரின் மகள் சுரண்யா. இவர் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவின் போது அந்த நிகழ்வை கண்டித்து ஜனவரி 20-23 ஆம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனிடையே, அதனை தொடர்ந்து இந்துயிசம் மற்றும் தேசியவாதத்தின் பெயரால் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், சக இஸ்லாமிய குடிமக்களுக்கு தனது அன்பு மற்றும் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் சுரண்யா ஐயர் வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இத்தகைய சூழலில் டெல்லி ஜங்புரா விரிவாக்கத்தில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கம் மணிசங்கர் அய்யர் மற்றும் அவரது மகள் சுரண்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சங்கத்தின் தலைவரான கபில் கக்கர், கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதம், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு எதிரான சுரண்யாவின் கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த கடிதத்தில், “குடியுரிமை நலசங்க அசோசியேசன் என்பதன் முறையில், குடியிருப்பாளர்களுக்கு இடையே நல்லுறவு இருப்பதைப் பார்ப்பது மட்டுமல்லாமல் குடியிருப்பில் அமைதியைக் குலைக்கும் வகையிலோ அல்லது குடியிருப்பாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் குடியுரிமை கோஷங்களையோ நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நோட்டீஸில், சமூக ஊடகங்களின் வாயிலாக சுரண்யா ஐயர் தெரிவித்த கருத்து படித்த நபருக்கு தகுதியற்ற வகையில் இருப்பதாகவும், 500 ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகுதான் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நோட்டீஸில், “இது பேச்சு சுதந்திரம் என நீங்கள் கூறலாம், ஆனால் உச்சநீதிமன்றத்தின்படி, கருத்து சுதந்திரம் என்பது முழுமையானது அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நாட்டின் நலனுக்காக அரசியலில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் நீங்கள் என்ன சொன்னாலும் உங்களது செயல்கள் குடியிருப்புக்கு நல்ல அல்லது கெட்டபெயரை கொண்டுவரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இதுபோன்ற பதிவுகள்/ கருத்துகள் இடுவதை தவிர்க்கவும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமையளிக்கும் ராமர் கோவில் கட்டப்படுவதில் நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லை எனில், தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லலாம். ஆனால், குடியிருப்பில் வெறுப்பையும் பதற்றத்தையும் உருவாக்கும் இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஒருமுறை ஈடுபடாதீர்கள்.

மணிசங்கர் ஐயருக்கு எங்களது வேண்டுகோள்., உங்களது மகள் சுரண்யா ஐயரின் செயலைக் கண்டித்தால் குடியிருப்போர் நலச்சங்கம் மிகவும் பாராட்டும். இதற்கு பிறகும் ராமர் கோயில் திறப்பு குறித்த உங்கள் கருத்தி சரி என்று நினைத்தால் இந்த குடியிருப்பில் இருந்து வெளியேறி வேறு இடத்திற்கு செல்லுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக அந்த டெல்லி ஜங்புரா விரிவாக்கத்தில் உள்ள குடியிருப்போர் நலச் சங்க தலைவரிடம் கேட்டபோது, ஆமாம், அவருடைய மகள் செய்தது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிராகவும் இருந்ததால்தான் அவருக்கு இப்படி ஒரு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று நம்மிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com